சென்னை :சென்னை ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் நிலையில், இன்று (ஜனவரி 14) மீண்டும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஒரு சவரன் (8 கிராம்) தங்கத்தின் விலை ரூ.880 உயர்ந்து ரூ.1,06,240க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கம் ரூ.110 உயர்ந்து ரூ.13,280க்கு விற்பனையாகிறது. இந்த உயர்வு பொங்கல் பண்டிகை மற்றும் திருமண சீசனில் தங்கம் வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புத்தாண்டு தொடங்கியது முதல் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. உலக சந்தையில் டாலர் மதிப்பு மாற்றம், பொருளாதார நிலவரங்கள், பண்டிகை தேவை, பணவீக்க அழுத்தம் ஆகியவை இந்த உயர்வுக்கு முக்கிய காரணங்களாக உள்ளன. கடந்த சில நாட்களில் ஏற்பட்ட சிறிய ஏற்ற இறக்கங்களுக்குப் பிறகு, இன்று கணிசமான அளவில் உயர்வு ஏற்பட்டுள்ளது.வெள்ளி விலையும் தங்கத்துடன் சேர்ந்து உயர்ந்துள்ளது.
சென்னை சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.15 உயர்ந்து ரூ.307க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி (பார் வெள்ளி) ரூ.3,07,000க்கு விற்பனையாகிறது. வெள்ளி நகை மற்றும் பொருட்கள் வாங்குபவர்களுக்கும் இந்த உயர்வு கூடுதல் சுமையாக அமைந்துள்ளது.பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வு மக்களின் கொண்டாட்டங்களை பாதித்துள்ளது. வல்லுநர்கள் தங்க விலை இன்னும் உயர வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர்.
நகை வாங்குபவர்கள் சந்தை நிலவரத்தை கவனித்து, தேவையான போது வாங்குவது நல்லது என்று அறிவுறுத்தப்படுகிறது. இந்த உயர்வு நகை வியாபாரிகளுக்கும் பெரும் சவாலாக உள்ளது.
