கருத்து வேறுபாடுகள் இருப்பது மனித இயல்பு – காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர்!

தலைமையினர் எடுக்கும் முடிவுகள் எப்போதும் நம் விருப்பத்துக்கு ஏற்ப இல்லாவிட்டாலும், அதை ஏற்றுக்கொள்வதே உண்மையான கடமை என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Manickam Tagore

சென்னை :தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக – காங்கிரஸ் கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ப. சிதம்பரம் தலைமையில் இறுதி முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராகுல் காந்தி இதற்கு ஒப்புதல் அளித்துள்ளார் என்றும், மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் இல்லாமலேயே இறுதி பங்கீடு நிறைவடையும் என்றும் தெரிகிறது.

திமுக தரப்பில் காங்கிரஸுக்கு 27 தொகுதிகள் வரை ஒதுக்க தயாராக உள்ள நிலையில், காங்கிரஸ் 28 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா இடம் கோரி வருகிறது. இந்த சிறு வேறுபாடு இருந்தாலும், பேச்சுவார்த்தை நேர்மறையாக நடைபெற்று வருவதாகவும், விரைவில் இறுதி உடன்பாடு எட்டப்படும் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் பின்னணியில் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் சமூக வலைதளத்தில் முக்கிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். “கருத்து வேறுபாடுகள் இருப்பது மனித இயல்பு. ஆனால் எந்த தனிநபரையும் விட கட்சியே உயர்ந்தது. தலைமையினர் எடுக்கும் முடிவுகள் நம் விருப்பத்துக்கு ஏற்ப இல்லாவிட்டாலும், ஒழுக்கத்துடனும் நம்பிக்கையுடனும் அதை ஏற்றுக்கொள்வதே உண்மையான கடமை — ஏனெனில் ஒற்றுமையே நமது மிகப்பெரிய சக்தி” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

இந்தப் பதிவு காங்கிரஸ் தொண்டர்களிடையே ஒற்றுமை மற்றும் கட்சி நலனை முன்னிலைப்படுத்தும் செய்தியாக பார்க்கப்படுகிறது. தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும் நிலையில், கட்சியின் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் மாணிக்கம் தாகூரின் பதிவு வெளியாகியுள்ளது. திமுக – காங்கிரஸ் கூட்டணி வலுவுடன் தேர்தலை சந்திக்கும் என்பது இதன் மூலம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.