ஜெயலலிதா நினைவு நாள் – தவெக நிர்வாகி செங்கோட்டையன் மரியாதை!

அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் ஜெயலலிதா நினைவு நாளையொட்டி, தவெக தலைமை ஒருங்கிணைப்பாளரும் கொங்கு மண்டல அமைப்புச் செயலாளருமான செங்கோட்டையன் நிர்வாகிகளுடன் மலர்தூவி மரியாதை

tvk sengottaiyan

சென்னை :தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளராக சமீபத்தில் நியமிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், கார்த்திகை தீபத் திருநாளையொட்டி டிசம்பர் 3-ம் தேதி தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்துச் செய்தி ஒன்றைப் பகிர்ந்திருந்தார். “இருள் நீங்கி தீமை ஒழிய, உங்கள் வாழ்வில் ஒளியும் நன்மையும் பொழியட்டும்” என்று தொடங்கிய அந்தப் பதிவில், தவெகவின் கொள்கைத் தலைவர்களான காமராஜர், பெரியார், அம்பேத்கர், வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகியோருடன் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, விஜய், நெல்சன் ஆகியோரின் புகைப்படங்களும் இடம்பெற்றிருந்தன.

ஜெயலலிதாவின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது தவெக ஆதரவாளர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கேள்வியையும் எழுப்பியது. “தவெக ஜெயலலிதாவையும் கொள்கைத் தலைவராக ஏற்றுக்கொண்டுவிட்டதா?” என்று சமூக வலைதளங்களில் கடும் விவாதம் வெடித்தது. இதனால் அழுத்தம் அதிகரித்த நிலையில், செங்கோட்டையன் அந்தப் பதிவை உடனடியாக நீக்கினார். ஆனால் சில மணி நேரங்களிலேயே அதே பதிவை – ஜெயலலிதா படம் உட்பட எந்த மாற்றமும் செய்யாமல் – மீண்டும் பதிவேற்றம் செய்தார். இது தவெக உட்கட்சி வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

கட்சித் தலைவர் விஜய் இதுவரை ஜெயலலிதாவை வெளிப்படையாகப் புகழ்ந்தோ கொள்கைத் தலைவராக ஏற்றோ பேசியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஜெயலலிதாவின் 9-வது நினைவு நாளான இன்று (டிசம்பர் 5) காலை செங்கோட்டையன் மீண்டும் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில் “மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்று வாழ்ந்து, நாட்டு மக்கள் எல்லோரும் எல்லா வளமும் பெற வேண்டும் என்று தன்னை அர்ப்பணித்து கொண்டு தவவாழ்வு வாழ்ந்த இதய தெய்வம், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நினைவு நாளில் அவர்களின் தியாகங்களையும், பெரும் புகழையும் போற்றி வணங்குகிறேன்” என கூறினார். இது தவெக ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையும் விவாதத்தையும் தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது.