கமலுக்கு சீட்..வைகோ அவுட்! மாநிலங்களவை எம்.பி., வேட்பாளர்களை அறிவித்த திமுக!

வில்சன், எஸ்.ஆர்.சிவலிங்கம், கவிஞர் சல்மா மாநிலங்களவை தேர்தலில் போட்டி என அறிவிக்கப்பட்டுள்ளது.

kamal haasan mk stalin VAIKO

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆறு மாநிலங்களவை எம்.பி-க்களின் பதவிக்காலம், வரும் ஜூலையில் நிறைவடைய இருக்கும் நிலையில், அடுத்த தேர்தல் வரும் ஜூன் மாதம் 19-ம் தேதி நடைபெறும் எனவும், ஜூன் மாதம் 9-ம் தேதி மனுத்தாக்கல் செய்ய கடைசி நாள் என்று தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்த சூழலில், திமுக கூட்டணி சார்பில் மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் இன்று (மே 28, 2025) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதன்படி, திமுக சார்பில் வழக்கறிஞர் பி. வில்சன், எஸ்.ஆர். சிவலிங்கம், கவிஞர் சல்மா ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர்களாகப் போட்டியிட உள்ளனர்.

அதே சமயம் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனும் திமுக கூட்டணியில் மாநிலங்களவை உறுப்பினராகப் போட்டியிடுவார் என மக்கள் நீதி மய்யம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், 2025 ஜூன் 19 அன்று நடைபெறவிருக்கும் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் நான்கு இடங்களில், மூன்று இடங்களுக்கு தி.மு.க. வேட்பாளர்களும், மற்றுமுள்ள ஒரு இடத்திற்கு ஏற்கெனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு இடம் ஒதுக்கப்படுகிறது.

தி.மு.க. வேட்பாளர்களாக

1. திரு. பி.வில்சன் பி.எஸ்சி., பி.எல்.,
2. திரு. எஸ்.ஆர்.சிவலிங்கம்
3. ரொக்கையா மாலிக் (என்கிற) கவிஞர் சல்மா ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்படுகிறது

திமுக சார்பில் போட்டியிடும் மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக (மதிமுக) தலைவர் வைகோவுக்கு இந்த மாநிலங்களவைத் தேர்தலில் வேட்பாளர் இடம் வழங்கப்படவில்லை.  திமுக கூட்டணியில் மதிமுக முக்கிய பங்கு வகித்து வந்தாலும், அவருக்கு சீட் வழங்கப்படவில்லை என்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

இருப்பினும் “நாடாளுமன்றத்திற்கு உள்ளே மட்டுமல்ல எப்போதும் மக்களின் குரலாக வைகோ ஒலிப்பார் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் தொடர்வோம் என மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ அறிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்