சென்னை : 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியுள்ள நிலையில், திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தனது தொகுதியான கொளத்தூரில் வேட்புமனு தாக்கல் செய்தார். கொளத்தூர் தொகுதியில் 2011ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து போட்டியிட்டு வரும் மு.க.ஸ்டாலின், இது நான்காவது முறையாக இந்தத் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
ஏற்கனவே, 2011, 2016, 2021 ஆகிய மூன்று தேர்தல்களிலும் அவர் கொளத்தூரில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளார். இதுவரை இந்தத் தொகுதியில் ஒரு முறை கூட தோல்வியடையாமல் தொடர்ந்து மக்களின் ஆதரவைப் பெற்று வருகிறார்.
மு.க.ஸ்டாலின் கொளத்தூரில் நான்காவது முறையாக போட்டியிடும் நிலையில், இந்தத் தொகுதி அவருக்கு “அசைக்க முடியாத கோட்டை” என்று அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. 2011 முதல் தொடங்கிய அவரது வெற்றிப் பயணம் 2026 தேர்தலிலும் தொடரும் என திமுக தொண்டர்கள் உறுதியாக நம்புகின்றனர்.
வேட்புமனு தாக்கல் செய்த பிறகு மு.க.ஸ்டாலின், கொளத்தூர் மக்களுக்கு நன்றி தெரிவித்தார். தொகுதியின் வளர்ச்சிக்காக தான் உழைத்து வருவதாகவும், எதிர்காலத்திலும் அதே அர்ப்பணிப்புடன் பணியாற்றுவேன் என்றும் அவர் தெரிவித்தார்.இந்த வேட்புமனு தாக்கல், திமுகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு அதிகாரப்பூர்வமான தொடக்கமாக அமைந்துள்ளது. மு.க.ஸ்டாலின் கொளத்தூரில் நான்காவது முறையாக போட்டியிடும் செய்தி, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
