டெல்லியில் காங்கிரஸ் எம்.பி. சுதாவிடம் செயின் பறித்த நபர் கைது!!

மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி. சுதாவிடம் டெல்லியில் நடைபயிற்சியின்போது 4.5 சவரன் தங்கச் சங்கிலியைப் பறித்தவர் கைது செய்யப்பட்டார்.

Sudha MP - Chain Snatching

டெல்லி :மயிலாடுதுறை எம்.பி. சுதா, டெல்லியில் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் பங்கேற்கச் சென்றிருந்தபோது, கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி அன்று காலை சாணக்கியபுரி பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர் அவரது கழுத்தில் இருந்த 4.5 சவரன் தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்றார்.

சுதா இதைத் தடுக்க முயன்றபோதும், மர்ம நபர் சங்கிலியைப் பறித்து தப்பியோடினார், இதில் அவருக்கு கழுத்தில் சிறிய காயம் ஏற்பட்டது. சுதா இந்த சம்பவம் குறித்து சாணக்கியபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார், மேலும் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும் கடிதம் எழுதினார்.

இதனையடுத்து, டெல்லி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில், இன்றைய தினம் செயின் பறித்த நபர் கைது செய்யப்பட்டு, 4 சவரன் தங்கச் சங்கிலி மீட்கப்பட்டது. டெல்லி காவல்துறையினர் திருடனைப் பிடித்து, பறிக்கப்பட்ட நகையை மீட்டனர்.

முன்னதாக இந்த சம்பவம் குறித்து சுதா, செய்தியாளர்களிடம் பேசுகையில், “நாட்டில் எம்.பி. ஒருவருக்கு இப்படி நடந்தால், பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது” என்று கவலை தெரிவித்தார். மேலும், சம்பவத்தின்போது அங்கிருந்தவர்கள் உதவிக்கு முன்வரவில்லை என்றும் ஆச்சரியம் தெரிவித்தார்.