“அழுத்தத்திற்கு அடிபணியமாட்டோம்” - பிஎம் ஸ்ரீ திட்டம் குறித்து அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்!

கடந்த 2 ஆண்டுகளாக தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி வந்து சேரவில்லை என அமைச்சர் ராஜ்மோகன் கூறியுள்ளார்.

Hero Image

சென்னை : நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், தமிழகத்தில் புதிய பாடத்திட்டம், ஆசிரியர்களுக்கான பயிற்சி, பள்ளிகள் திறப்பு, அடிப்படை வசதிகள், இருமொழிக் கொள்கை உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து விரிவாக பேசினார்.

அமைச்சர் கூறுகையில், “ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய பாடநூல்களுக்கான பயிற்சி கையேடு நேற்று வெளியிடப்பட்டது. இதற்காக ‘Training the Trainers’ என்ற முறையில் முதற்கட்ட பயிற்சி இன்று தொடங்கப்பட்டுள்ளது. இதில் கலந்து கொள்ளும் ஆசிரியர்கள், பின்னர் மாவட்டம் தோறும் சென்று மற்ற ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிப்பார்கள். எந்தப் பாடத்தை எப்படி எடுக்க வேண்டும், குழந்தைகளுக்கு எப்படிச் சொல்லித் தர வேண்டும் என்பதற்கான முழுமையான வழிகாட்டுதல்களும் வழங்கப்படுகின்றன” என்றார்.

பள்ளிகள் திறப்பு குறித்து பேசிய அவர், “தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளும் ஜூன் 1ஆம் தேதி திறக்கப்படுகின்றன. ஆனால் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மட்டும் ஜூன் 4ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். இதற்குக் காரணம், அந்த வகுப்புகளுக்குப் பாடம் எடுக்க இருக்கும் ஆசிரியர்களுக்கு முதலில் முழுமையான பயிற்சி அளிக்க வேண்டியுள்ளது. விடுமுறை காலத்தில் ஆசிரியர்களுக்கு கூடுதல் சுமை ஏற்படக்கூடாது என்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்று விளக்கம் அளித்தார்.

மேலும், “இந்த புதிய பாடத்திட்டம் முழுவதும் மாணவர்களை மையமாகக் கொண்ட Child Centric Approach ஆக வடிவமைக்கப்பட்டுள்ளது. படிப்பில் சிரமப்படும் மாணவர்களையும் பின்தங்க விடாமல் அனைவரையும் அரவணைத்து கொண்டு செல்லும் வகையில் பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஒரு மாணவருக்கு தமிழ் நன்றாக வரலாம், மற்றொருவருக்கு கணக்கு சிரமமாக இருக்கலாம். அப்படிப்பட்ட மாணவர்களையும் ஆசிரியர்கள் தனிப்பட்ட கவனத்துடன் முன்னேற்ற வேண்டும் என்பதுதான் இந்த திட்டத்தின் நோக்கம்” என்று கூறினார்.

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மற்றும் இடைநிற்றலைக் குறைப்பது குறித்து பேசிய அமைச்சர், “தமிழகத்தில் அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், மாணவர் சேர்க்கையில் தனியார் பள்ளிகளே முன்னிலையில் உள்ளன. இதை மாற்ற வேண்டும் என்பதற்காகவே புதிய பாடநூல்கள் மற்றும் புதிய கற்றல் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பொருளாதார பிரச்சனை, சமூக சூழல் அல்லது மருத்துவ காரணங்களால் எந்த மாணவரும் பள்ளியை விட்டு விலகக்கூடாது என்பதற்காக ஏற்கனவே பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன” என்றார்.

அதேபோல், அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார். “தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் கழிப்பறை வசதி, குடிநீர் வசதி, சேதமடைந்த வகுப்பறைகள், வெளிச்ச வசதி, கரும்பலகை மற்றும் ஸ்மார்ட் கிளாஸ் வசதிகள் உள்ளிட்ட அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இதற்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான கோப்புகளில் கையொப்பமிடப்பட்டுள்ளது. விரைவில் முதலமைச்சரின் அறிவிப்பும் வெளியாகும்” என்று கூறினார்.

மத்திய அரசின் கல்வி நிதி மற்றும் மொழிக் கொள்கை குறித்து பேசிய அமைச்சர் ராஜ்மோகன், “கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய கல்வி நிதி வரவில்லை. அது அதிகாரிகளுக்கான நிதி அல்ல, மாணவர்களுக்கான நிதி. எந்த காரணத்திற்காகவும் அதைத் தடுக்கக் கூடாது. அதேசமயம், எந்த மறைமுக அழுத்தத்திற்கும் தமிழக அரசு அடிபணியாது. இருமொழிக் கொள்கை என்பது எங்களுடைய உறுதியான கொள்கை. அதில் எந்த சமரசமும் இல்லை” என்று தெரிவித்தார்.

“அழுத்தத்திற்கு அடிபணியமாட்டோம்” - பிஎம் ஸ்ரீ திட்டம் குறித்து அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்!