காதலை ஏற்க மறுத்த +2 மாணவி படுகொலை – இளைஞர் கைது!

ராமேஸ்வரம் சேராங்கோட்டை பகுதியில் பள்ளிக்குச் சென்ற மாணவியை கொலை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Rameshwaramstudentmurder

ராமநாதபுரம் :மாவட்டம், ராமேஸ்வரம் அருகே உள்ள சேராங்கோட்டை பகுதியில் பரிதாபமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. ராமேஸ்வரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் +2 படிக்கும் மாணவி ஒருவர், காதலிக்க மறுத்ததால் அதே பகுதியைச் சேர்ந்த முனியராஜ் (வயது 21) என்பவரால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

நவம்பர் 19, 2025 காலை பள்ளிக்குச் செல்லும் வழியில் இந்த வெறிச்செயல் நடந்தேறியது. கழுத்து, உள்ளிட்ட பகுதிகளில் பலமுறை குத்தப்பட்ட மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.கொலை செய்யப்பட்ட மாணவி, மீனவர் மாரியப்பன் என்பவரின் மூத்த மகள். கடந்த சில நாட்களாக முனியராஜ் மாணவியை ஒருதலை காதலித்து வற்புறுத்தி வந்துள்ளார். இதை மாணவி தந்தையிடம் தெரிவித்ததும், மாரியப்பன் முனியராஜ் வீட்டுக்குச் சென்று கண்டித்துள்ளார்.

ஆனால் அதை ஏற்க மறுத்த முனியராஜ், ஆத்திரத்தில் இன்று காலை கத்தியுடன் சென்று மாணவியை கொலை செய்துள்ளார். சம்பவத்திற்குப் பிறகு முனியராஜ் தப்பி ஓட முயன்ற நிலையில், அப்பகுதி மக்களால் பிடிக்கப்பட்டு போலீசில் ஒப்படைக்கப்பட்டார். ராமேஸ்வரம் துறைமுக காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து மாணவியின் உடலை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலையாளி முனியராஜை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொலைக்கான காரணம், தொடர் தொல்லை மற்றும் காதலை ஏற்க மறுத்த ஆத்திரம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தக் கொடூரச் சம்பவம் சேராங்கோட்டை மற்றும் ராமேஸ்வரம் பகுதிகளில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பள்ளி மாணவிகளின் பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்வி எழுந்துள்ளது. மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் பெண் குழந்தைகளின் பயணப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பொதுமக்களும் அரசியல் கட்சியினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.