தூத்துக்குடி :மாவட்டம் விளாத்திக்குளத்தில் 2 நாட்களுக்கு முன்பு +2 படித்து வந்த மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தில் ஆறுதல் தெரிவிக்க வந்த திமுக எம்.பி. கனிமொழியிடம் மாணவியின் உறவினர்கள் ஆவேசமாக கேள்வி எழுப்பினர்.“நேற்று ஏன் வரவில்லை?” என்று உறவினர்கள் கனிமொழியிடம் கோபமாகக் கேட்டனர்.
மாணவி கொலை செய்தி வெளியான மறுநாளே கனிமொழி அங்கு சென்றிருந்தால் சம்பவ இடத்தை நேரில் பார்த்திருக்கலாம் என்றும், விசாரணைக்கு அழுத்தம் கொடுத்திருக்கலாம் என்றும் உறவினர்கள் குற்றம் சாட்டினர். இந்தக் கேள்வி அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி, “போஸ்ட்மார்டம் நடந்து முழு அறிக்கை இன்னும் வரவில்லை. எனவே அது எப்படிப்பட்ட சம்பவம் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.
ஆனால் இளம் பெண்ணின் உயிரிழப்பு மிகக் கொடியது. முதலமைச்சர் உடனடியாக குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க உத்தரவிட்டுள்ளார்” என்று தெரிவித்தார்.கனிமொழி மேலும் கூறியதாவது, “ஏற்கனவே ஒரு ASP தலைமையில் 4 DSP-க்கள், 6 இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. எல்லா இடங்களிலும் விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்” என்று உறுதியளித்தார்.
முதலில் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதே முதன்மை என்றும் அவர் வலியுறுத்தினார்.இந்த சம்பவம் தமிழகத்தில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து மீண்டும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. உறவினர்களின் ஆவேசம், கனிமொழியின் பதில் ஆகியவை ஊடகங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன. மாணவியின் கொலை வழக்கு தற்போது சிபிஐ அளவில் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
