நெல்லை :மாவட்டம், பாளையங்கோட்டையில் சுதந்திரப் போராட்ட தியாகி மாவீரர் பூலித்தேவனின் 310-வது பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) அவரது நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில், அதிமுக தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், “அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற அனைத்து சக்திகளும் ஒன்றிணைய வேண்டும். அப்போது மட்டுமே 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற முடியும். சசிகலா அவர்கள் வெளியிட்ட, கட்சி ஒன்றிணைய வேண்டும் என்ற அறிக்கையை மனமார வரவேற்கிறேன். சசிகலாவுக்கு வலு சேர்க்கும் வகையில், அதிமுகவை ஒன்றிணைக்கும் பணியில் நான் ஈடுபட்டு வருகிறேன்,” என்று தெரிவித்தார்.
மேலும், “அனைத்து தொகுதிகளுக்கும் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் புகழைப் பாடும் தொண்டனாக வருவேன்,” என்று கூறினார்.தவெக தலைவர் விஜய்யுடன் கூட்டணி குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ஓபிஎஸ், “எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம்,” என்று பதிலளித்தார், இது அரசியல் வட்டாரங்களில் விவாதத்தை தூண்டியுள்ளது. அவர் மேலும், “பிரிந்து கிடக்கும் சக்திகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். அதிமுகவை ஒரு வலுவான சக்தியாக மீண்டும் உருவாக்குவதற்கு உறுதியாக உள்ளேன்,” என்று வலியுறுத்தினார்.
ஓபிஎஸ்ஸின் இந்த அறிவிப்பு, அதிமுகவில் ஒற்றுமையை மீட்டெடுக்கும் முயற்சிகளுக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. சசிகலாவின் அறிக்கை மற்றும் ஓபிஎஸ்ஸின் ஒருங்கிணைப்பு முயற்சிகள், 2026 தேர்தலுக்கு முன்னர் கட்சியை வலுப்படுத்துவதற்கான முக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது.
