சென்னை :விசிக தலைவர் தொல். திருமாவளவன் மறைந்த முதலமைச்சர்களான எம்.ஜி. ராமச்சந்திரன் மற்றும் ஜெயலலிதாவை விமர்சித்ததற்காக, ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில் கருணாநிதி நினைவு நிகழ்ச்சியில் திருமாவளவன், எம்.ஜி.ஆர்-ன் வருகையால் திராவிட இயக்கத்தில் பிராமணியம் ஊடுருவியதாகவும், ஒரு பிராமண பெண்ணுக்கு திராவிட கட்சியை வழிநடத்த வழிவகுத்ததாகவும் கூறியிருந்தார்.
இதற்கு பதிலளித்த ஓபிஎஸ், அனைத்து தரப்பு மக்களுக்காகவும் பாடுபட்ட எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவை விமர்சிப்பது நியாயமற்ற செயல் என்று கூறி, திருமாவளவனுக்கு கண்டனம் தெரிவித்தார். திமுகவிடம் கூடுதல் தொகுதி வாங்க திமுக தலைவரை திருமாவளவன் புகழந்து பேசுவதில் தவறில்லை, மக்கள் செல்வாக்கு பெற்ற, சாதி மதங்களை கடந்த மறைந்த தலைவர்களை விமர்சிப்பது நாகரிகமற்ற செயல் எம்ஜிஆர், ஜெயலலிதா குறித்த விமர்சனத்தை திருமாவளவன் திரும்பப் பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஓபிஎஸ் தனது எக்ஸ் பக்கத்தில், “உன் முகத்தைக் காட்டினால் முப்பது இலட்சம் வாக்குகள் நிச்சயம்” என்று பேரறிஞர் அண்ணா அவர்களே பாராட்டும் அளவுக்கு மக்கள் செல்வாக்கைப் பெற்றத் தலைவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள். புரட்சித் தலைவரின் மக்கள் செல்வாக்கு தான் தி.மு.க.வை ஆட்சிக் கட்டிலில் அமர வைத்தது.
பேரறிஞர் அண்ணா அவர்களின் மறைவிற்குப் பிறகு, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் மாபெரும் இயக்கத்தைத் தோற்றுவித்து, முதல் இடைத் தேர்தலிலேயே தனக்குள்ள மக்கள் செல்வாக்கை நிருபித்தவர்.
தொல் திருமாவளவன் பேசி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 30 விழுக்காட்டிலிருந்து 50 விழுக்காடாக உயர்த்திய பெருமைக்குரியவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள். 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டிற்கு சட்டப் பாதுகாப்பு வாங்கிக் கொடுத்தவர் சமூக நீதிகாத்த வீராங்கணை புரட்சித் தலைவி அம்மா அவர்கள்.
“எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும், இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்” என்று அனைத்துத் தரப்பு மக்களுக்காகவும் பாடுபட்ட புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சித் தலைவி அம்மா ஆகியோரை விமர்சிப்பது நியாயமற்ற செயல். வருகின்ற தேர்தலில், கூடுதல் தொகுதிகள் வாங்க வேண்டும் என்பதற்காகவோ அல்லது கூட்டணி அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என்பதற்காகவோ தி.மு.க.வையோ அல்லது தி.மு.க. தலைவரையோ திருமாவளவன் புகழ்ந்து பேசுவதில் யாருக்கும் எவ்வித மாறுபட்ட கருத்தும் இருக்க முடியாது” என்று விரிவாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
