”வென்றால் மாலை.., இல்லை என்றால் பாடை” – சீமானின் பரபரப்பு பேச்சு.!
5-வது முறை ஒரு கட்சி தனித்து போட்டியிடுகிறது என்றால் நாதக மட்டுமே என்று சீமான் கூறியுள்ளார்.

சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று நா.த.கவின் ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த
நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ”நாம் தமிழர் மக்களை நம்பி மட்டுமே தேர்தலை சந்திக்கும், வேறு யாருடனும் கூட்டணி இல்லை” என அவர் உறுதிபட கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், ”வெற்றி, தோல்வியை தாண்டி தனித்து போட்டியிடும் கட்சி தான் நாம் தமிழர். எங்கள் பயணம் எங்கள் கால்களை நம்பி தான். அடுத்தவர் கால்கள், தோள்களை நம்பினால் எங்கள் இலக்கின் பயணத்தை அடைய முடியாது.ஒரு கட்சி மற்றொரு கட்சியை கூட்டணிக்கு அழைப்பது இயல்பு தான்.
நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடு ஒரே நிலைப்பாடு தான். 5-வது முறை ஒரு கட்சி தனித்து போட்டியிடுகிறது என்றால் நாதக மட்டுமே என்றும் நிராகரிக்கப்பட்ட தமிழ் சமூகங்களுக்கு போட்டியிட வாய்ப்பளிக்கப்படும்” எனவும் தெரிவித்துள்ளார்.
தேர்தலில் தோற்றால் பாடை
மேலும், சட்டமன்ற தேர்தலில் வெல்பவர்களை பல்லக்கில் ஏற்றி மாலை போட்டு அழைத்து வருவேன். தோற்பவர்களை பாடையில் ஏற்றி மாலை போட்டு அனுப்பி வைப்பேன். எப்படி இருந்தாலும் மாலை கன்ஃபார்ம், தோற்றுவிட்டால் சிறிது பால்டாயிலை குடித்துவிட்டு நீங்களே பாடையில் படுத்துவிடுங்கள்.
விஜய் கட்சிக்கு செல்லுங்கள்
2026 சட்டமன்ற தேர்தலுக்கு நாதகவில் நான் சொல்பவர்கள் தான் வேட்பாளர்கள். நான் சொல்வதற்கு மாறாக தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றால் நா.த.கவினர் விஜய் கட்சிக்கு சென்றுவிடுங்கள். விஜய் கட்சிக்கு செல்வதாக இருந்தால் கூறுங்கள் நானே சேர்த்துவிடுகிறேன்.