பாஜகவின் பாதம் தாங்கி என்பதை பழனிசாமி நிரூபித்துக் கொண்டிருக்கிறார்...முதல்வர் ஸ்டாலின் சாடல்!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகிறார் எதிர்க்கட்சித் தலைவர் கே.பழனிசாமி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

edappadi palanisamy vs stalin

தர்மபுரி :தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தருமபுரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர சீராய்வு (SIR) நடைமுறையை கடுமையாக விமர்சித்தார். “சீராய்வு என்ற பெயரில் தீய செயலை செய்கிறது தேர்தல் ஆணையம்” என்று கூறிய அவர், இது வாக்காளர் பட்டியலில் தமிழர்களை வெளியேற்றும் சதி என்று குற்றம் சாட்டினார். SIR-க்கு எதிராக நேற்று (நவம்பர் 2) அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியதாகவும், அதில் அதிமுக உள்ளிட்ட சில கட்சிகள் பங்கேற்கவில்லை என்றும் தெரிவித்தார்.

மேலும், “பாஜகவுக்கு பயந்து எதிர்க்கட்சியான அதிமுக பங்கேற்கவில்லை. ஆனாலும் அவர்கள் பேசியிருக்கிறார்கள், அதற்கு நன்றி” என்று கூறினார். ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை நேரடியாக தாக்கி, “SIR-ல் கூட இபிஎஸ் இரட்டை வேடம் போடுகிறார். பாஜகவுக்கு பயந்து தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை எதிர்க்க பயப்படுகிறார். பாஜகவின் பாதம் தாங்கி என்பதை நொடிக்கு ஒரு முறை நிரூபிக்கிறார்” என்று விமர்சித்தார். அதிமுக பங்கேற்காதது பாஜக அச்சத்தால் என்று கூறிய அவர், தேர்தல் நேர்மையாக நடைபெற வேண்டும் என அனைத்துக் கட்சிகளும் வலியுறுத்தியதாக தெரிவித்தார்.

SIR நடைமுறை, வாக்காளர் பட்டியலை சீர்குலைக்கும் முயற்சி என்று அவர் கண்டனம் தெரிவித்தார்.பிரதமர் நரேந்திர மோடியையும் ஸ்டாலின் சாடினார். “பீகாரில் பேசிய அதே கருத்தை தமிழ்நாட்டுக்கு வந்து பேச மோடிக்கு தைரியம் இருக்கிறதா? வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு பற்றி இங்கு வாழும் அனைவருக்கும் தெரியும்” என்று கேள்வி எழுப்பினார். பாஜகவின் சதி செயல்கள் எதுவாக இருந்தாலும், தமிழ்நாட்டில் எதுவும் செய்ய முடியாது என்று உறுதியாக கூறினார். “நான் உறுதியாக சொல்கிறேன், பாஜக எப்படிப்பட்ட சதிச் செயல்களை செய்தாலும் அவர்களால் தமிழ்நாட்டில் எதுவும் செய்ய முடியாது” என்று அவர் அறிவித்தார்.

அனைத்துக் கட்சி கூட்டம், SIR-க்கு எதிரான முக்கிய நடவடிக்கையாக அமைந்தது. கூட்டத்தில் பங்கேற்ற கட்சிகள், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றின. அதிமுக போன்ற கட்சிகள் பங்கேற்காதது, பாஜக அழுத்தம் காரணமாக என்று ஸ்டாலின் சுட்டிக்காட்டினார். இபிஎஸ்-க்கு தைரியம் இல்லை என்று கூறிய அவர், இரட்டை வேடம் போடுவதாக விமர்சித்தார்.