த.வெ.கவின் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பா? விளக்கம் கொடுத்த சென்னை கமிஷனர்!
ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டாம் என்று கூறவில்லை, மாறாக மீண்டும் முறையாக மனு அளித்து, உரிய நேரம் வழங்கினால், அதனை பரிசீலித்து அனுமதி வழங்கப்படும் என சென்னை காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை திருட்டு வழக்கில் போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து, த.வெ.க கடந்த ஜூலை 6 அன்று சென்னை சிவானந்தா சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி சென்னை காவல் துறையிடம் மனு அளிக்கப்பட்டது. இந்த மனு இரண்டு முறை நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, த.வெ.க சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக, சென்னை காவல் ஆணையர் அருண் விளக்கமளித்து, “த.வெ.கவின் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்படவில்லை. ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு காவல் துறைக்கு முறையாக 15 நாட்கள் முன்னதாக மனு அளிக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. த.வெ.க தரப்பு கடந்த ஜூலை 1 அன்று தேதி தான் மனு அளித்தது, ஆனால் உரிய கால அவகாசம் தரப்படவில்லை.
மனுவைப் பரிசீலிக்க காவல் துறைக்கு போதுமான நேரம் தேவை. ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டாம் என்று கூறவில்லை, மாறாக மீண்டும் முறையாக மனு அளித்து, உரிய நேரம் வழங்கினால், அதனை பரிசீலித்து அனுமதி வழங்கப்படும்,” என்று தெரிவித்தார். சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி வேல்முருகன் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, “ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கோரி மீண்டும் காவல் துறையிடம் மனு அளிக்க வேண்டும்.
மனு எண்ணிடப்பட்டு, விசாரணைக்கு பட்டியலிடப்பட்டால், உரிய முறையில் விசாரிக்கப்படும். நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதை விட, மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது முக்கியம்,” என்று அறிவுறுத்தினார். இதைத் தொடர்ந்து, த.வெ.க சார்பில் மீண்டும் காவல் துறையிடம் மனு அளிக்கப்பட்டு, ஜூலை 6 அன்று ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருப்பினும், சிலர் இந்த அனுமதி த.வெ.கவுக்கு வழங்கப்பட்டதாகவும், ஆனால் நாம் தமிழர் கட்சிக்கு (NTK) மறுக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர், இது அரசியல் விவாதத்தை கிளப்பியுள்ளது. இந்த விவகாரத்தில், சென்னை காவல் ஆணையர் தெளிவாக அனுமதி மறுக்கப்படவில்லை என்றும், விதிமுறைகளுக்கு உட்பட்டு மனு அளிக்கப்பட்டால் பரிசீலிக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.