துணை முதலமைச்சர் உதயநிதியின் தனிச் செயலாளர் யார் தெரியுமா.? வெளியான புதிய தகவல்.!
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தனிச் செயலாளராக பிரதீப் யாதவ் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நேற்று முன்தினம் நியமனம் செய்யப்பட்டார். மேலும், செந்தில் பாலாஜி, நாசர் , கோவி. செழியன், ஆர்.ராஜேந்திரன் ஆகியோர் தமிழக அமைச்சரவையில் சேர்க்கப்பட்டனர். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதால் அவருக்கென தனிச் செயலாளர் நியமனம் செய்யப்படுவார்.
துணை முதலமைச்சருக்கான தனி செயலாளர் பதவியானது, முதலமைச்சருக்கு அடுத்தபடியாக இருக்கும் தலைமை செயலாளர் பதவிக்கு அடுத்த இடத்தில் உள்ள முக்கிய பதவியாகும். இப்படியான பதவிக்கு யார் நியமனம் செய்யப்பட உள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
மூத்த ஐஏஎஸ் அதிகாரியான பிரதீப் யாதவ் நியமனம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இவர் தற்போது தமிழக உயர்கல்வித்துறை செயலாளராக பொறுப்பில் உள்ளார். உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி மாற்றம் செய்யப்பட்டதால் இவரும் மாற்றம் செய்யப்பட அதிக வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்படுகிறது.
பிரதீப் யாதவ், 1992ஆம் ஆண்டு தமிழ்நாடு ஐஏஎஸ் பேட்சை சேர்ந்தவர். வருவாய்த்துறை, தொழில்துறை, கிராமப்புற மேலாண்மை, நில வருவாய் மேலாண்மை, சமூக நீதி மற்றும் மனித வள மேம்பாடு, நிதித்துறை ஆகிய துறைகளில் உதவி செயலாளராகவும் , நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் செயலாளராகவும் செயலாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. துணை முதலமைச்சர் உதயநிதியின் தனி செயலாளர் பற்றிய அறிவிப்பு இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.