கூட்டணி கட்சிகளிடம் ஆலோசிக்கப்பட்டதா? தன்னிச்சையாகப் பெயரை அறிவித்த பிரவீன் சக்ரவர்த்தி!

தவெக கூட்டணி குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமான எந்த தகவலும் வெளியாகாத நிலையில், காங்கிரஸின் பிரவீன் சக்கரவர்த்தி தன்னிச்சையாகக் கூட்டணியின் பெயரை அறிவித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

Hero Image

சென்னை : தமிழக அரசியலில் புதிய விவாதத்தை கிளப்பும் வகையில், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற வேட்பாளரான பிரவீன் சக்ரவர்த்தி வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ளது. தனது பதிவில், "தமிழ்நாடு சமூகநீதி முற்போக்கு கூட்டணியின் முதல் நாடாளுமன்ற வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டதை பெருமையாகவும், மிகப்பெரிய பொறுப்பாகவும் கருதுகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தனது மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பு வழங்கிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்து, நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களின் குரலாக செயல்படுவேன் என்றும் உறுதியளித்துள்ளார்.

பிரவீன் சக்ரவர்த்தியின் பதிவில், தவெக, காங்கிரஸ், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை இடம்பெற்ற கூட்டணியை "தமிழ்நாடு சமூகநீதி முற்போக்கு கூட்டணி" என குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இதுவரை தவெக தரப்பிலோ அல்லது கூட்டணியில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சிகள் தரப்பிலோ கூட்டணியின் பெயர் குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த நிலையில், கூட்டணியின் பெயரை பிரவீன் சக்ரவர்த்தி தன்னிச்சையாக அறிவித்தாரா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.

மேலும், கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்து கட்சிகளுடனும் ஆலோசனை நடத்தப்பட்ட பிறகே இந்த பெயர் முடிவு செய்யப்பட்டதா அல்லது தனிப்பட்ட முறையில் பயன்படுத்தப்பட்ட பெயரா என்பதும் விவாதமாகியுள்ளது.

வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தவெக தலைமையிலான கூட்டணியின் அரசியல் நடவடிக்கைகள் தீவிரமடைந்து வரும் நிலையில், கூட்டணியின் அதிகாரப்பூர்வ பெயர் குறித்து தவெக மற்றும் கூட்டணிக் கட்சிகள் விளக்கம் அளிப்பார்களா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

பிரவீன் சக்ரவர்த்தியின் இந்த பதிவு தற்போது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், கூட்டணியின் பெயர் தொடர்பான விவாதத்தையும் தீவிரப்படுத்தியுள்ளது.

கூட்டணி கட்சிகளிடம் ஆலோசிக்கப்பட்டதா? தன்னிச்சையாகப் பெயரை அறிவித்த பிரவீன் சக்ரவர்த்தி!