சென்னை : தமிழக அரசு மருத்துவர்களுக்கு கிடைக்க வேண்டிய 152 உயர்சிறப்பு மருத்துவ படிப்பு இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டிய நிலையில், அதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் உயர்சிறப்பு மருத்துவ படிப்புகளுக்கான மொத்த இடங்கள் 422 உள்ளன. இதில் 219 இடங்கள் மாநில ஒதுக்கீட்டிற்கும், மீதமுள்ள இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கும் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டுகளில் மாநில ஒதுக்கீட்டில் நிரப்பப்படாமல் மீதமிருந்த இடங்கள் அனைத்தும் கலந்தாய்வு முடிந்த பிறகு அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு ஒப்படைக்கப்பட்டன. அதன் பின்னர் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் குறைக்கப்பட்டு, அந்த இடங்கள் அகில இந்திய தரவரிசை பட்டியல் மூலம் நிரப்பப்பட்டன. இதனால் தமிழக அரசு மருத்துவர்கள் பாதிக்கப்பட்டனர்.
2024ஆம் ஆண்டில் 119 இடங்களும், 2025ஆம் ஆண்டில் 145 இடங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு ஒப்படைக்கப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மேலும், கடந்த ஆண்டு 152 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு செல்லாமல் தடுக்கப்பட்டதாக கூறப்படுவது உண்மைக்கு புறம்பான தகவல் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு மாநில ஒதுக்கீட்டில் 151 இடங்கள் நிரப்பப்படாமல் இருந்தபோதும், அவற்றை அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு ஒப்படைக்க தமிழக அரசு மறுத்ததாக அமைச்சர் கூறியுள்ளார். முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான அரசு, இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் வலுவான வாதங்களை முன்வைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வழக்கு விசாரணையின் போது, குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்ணை குறைப்பது குறித்து பின்னர் முடிவு எடுக்கப்படும் என்று ஒன்றிய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும், இதையடுத்து கடந்த மே 29ஆம் தேதி வழங்கிய தீர்ப்பில் 151 இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு ஒப்படைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட அனைத்து இடங்களும் தமிழக மருத்துவர்களால் நிரப்பப்பட வேண்டும் என்பதே மாநில அரசின் உறுதியான நிலைப்பாடு என்றும், அதற்காக உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஜூன் 4ஆம் தேதி மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கிராமப்புற மக்களுக்கும் உயர்தர மருத்துவ சேவைகள் கிடைக்க வேண்டும் என்பதிலும், மாநில உரிமைகள் மற்றும் இடஒதுக்கீட்டு கொள்கையை பாதுகாப்பதிலும் தமிழக அரசு உறுதியாக செயல்பட்டு வருவதாக அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
