நீலகிரி :அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, நீலகிரி மாவட்டத்தில் நடந்த கட்சி நிகழ்ச்சியில், திமுக ஆட்சியை கடுமையாக விமர்சித்தார். “திமுக ஆட்சியில் விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துவிட்டது. அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. வேலைவாய்ப்பு குறைந்துவிட்டது, மக்களின் செலவுகள் பன்மடங்கு அதிகரித்துவிட்டன,” என்று கூறினார்.
மேலும், “குன்னூருக்கு திமுக ஆட்சியில் எந்தவொரு வளர்ச்சித் திட்டமும் செயல்படுத்தப்படவில்லை,” என்று குற்றம்சாட்டினார். இந்த விமர்சனங்கள், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன் அதிமுகவின் பிரச்சார உத்தியை வலுப்படுத்துவதாக அமைந்தன.நீலகிரி மாவட்டத்தின் மீதான திமுகவின் அலட்சியத்தை எடப்பாடி மேலும் விளக்கினார். “நீலகிரி மாவட்டத்தை அம்மா (மறைந்த முதல்வர் ஜெயலலிதா) மிகவும் நேசித்தார். ஆனால், திமுக ஆட்சியில் இந்த மாவட்டத்தின் வளர்ச்சி முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது,” என்று குறிப்பிட்டார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர், திமுகவின் ஆட்சியில் உள்ளூர் மக்களின் பொருளாதார நிலை மோசமடைந்து, வேலைவாய்ப்பு வாய்ப்புகள் குறைந்துவிட்டதாகவும் விமர்சித்தார். அதனைத்தொடர்ந்து எடப்பாடி, 2026ல் அதிமுக ஆட்சிக்கு வந்தால், நீலகிரியின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கு முக்கிய முடிவுகளை எடுப்போம் என்று உறுதியளித்தார். “நீலகிரி வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட இ-பாஸ் முறையை தளர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். இது, சுற்றுலாவை ஊக்குவித்து, உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்தும்,” என்று அவர் கூறினார்.
இந்த வாக்குறுதி, சுற்றுலாவை நம்பியுள்ள நீலகிரி மக்களுக்கு நம்பிக்கையை அளிக்கும் வகையில் இருந்தது. மேலும், இந்த மாற்றங்கள் உள்ளூர் வணிகங்களுக்கு பயனளிக்கும் என்று எடப்பாடி வலியுறுத்தினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் எடப்பாடி, திமுக ஆட்சியின் காலம் முடிவுக்கு வருவதாகவும் குறிப்பிட்டார். அதுமட்டுமின்றி, “திமுக அரசு ஏழைகளைப் பற்றியோ, விலைவாசி உயர்வைப் பற்றியோ கவலைப்படவில்லை. இவர்களின் ஆட்சி முடிவடைய இன்னும் 7 மாதங்கள் தான் உள்ளது,” என்று கூறி, 2026 தேர்தலில் அதிமுக வெற்றிபெறும் என உறுதியாக நம்புவதாகவும் நம்பிக்கை தெரிவித்தார்.
