சென்னை : தமிழகத்தில் பல கோவில்களில் நீண்ட காலமாக கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் இருப்பது தொடர்பாக எழுந்த கேள்விக்கு பதிலளித்த அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், கோவில்களின் தேவைகளை முழுமையாக ஆய்வு செய்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
இதுகுறித்து பேசிய அவர், "நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்று ஒரு மாதம்தான் ஆகிறது. பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த பணிகளை விரைவாக நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறோம். தமிழகம் முழுவதும் எந்தெந்த கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும், எந்த கோவில்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பது குறித்து விரிவான ஆய்வு நடைபெற்று வருகிறது" என்றார்.
மேலும், "கும்பாபிஷேகம் மட்டுமல்லாமல், எந்தெந்த கோவில்களில் அன்னதானத் திட்டத்தை விரிவுபடுத்தலாம், ஒரு கால பூஜை மட்டுமே நடைபெறும் கோவில்களில் மூன்று கால பூஜைகள் நடைபெற என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் ஆய்வு செய்து வருகிறோம். அதேபோல், பாழடைந்த நிலையில் உள்ள கோவில்களை கண்டறிந்து அவற்றை புனரமைத்து மீண்டும் வழிபாட்டிற்கு கொண்டு வரவும் திட்டமிட்டு இருக்கிறோம்" என்று தெரிவித்தார்.
குமரக்கோட்டம் முருகன் கோவில், வரதராஜ பெருமாள் கோவில் உள்ளிட்ட பல கோவில்களில் கும்பாபிஷேகப் பணிகள் பெரும்பாலும் நிறைவடைந்திருந்தும், இறுதி நிகழ்வு நடைபெறாமல் காலதாமதமாக இருப்பது குறித்தும் அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக அமைச்சர் கூறினார்.
சிறப்பு தரிசனக் கட்டணம் தொடர்பாக எழுந்த கேள்விக்கு பதிலளித்த அவர், "பெரிய கோவில்களில் மட்டுமல்லாமல், சில சிறிய கோவில்களிலும் சிறப்பு தரிசன கட்டணம் வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக உள்ளூர் பக்தர்கள் பாதிக்கப்படாத வகையில் தரிசன முறையை எப்படி ஒழுங்குபடுத்த வேண்டும் என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்" என்றார்.
மேலும், கோவில்களில் பக்தர்களுக்கு எளிதான தரிசனம், கூடுதல் வசதிகள், அன்னதானத் திட்ட விரிவாக்கம் மற்றும் பாழடைந்த கோவில்களின் மறுசீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து துறை சார்ந்த அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆய்வுகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
