வருகின்ற ஆகஸ்ட் 7 ஆம் தேதி வெள்ளிக்கிழமையும் ரேஷன் கடைகள் திறப்பு!

ரேஷன் கடைகள் வருகின்ற வெள்ளிக்கிழமை விடுமுறை இன்றி இயக்கப்படும் எனவும், இதற்கு பதிலாக மாற்று விடுமுறை இன்னொரு நாள் அறிவிக்கப்படும் எனவும் தமிழக அரசு கூறியுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், கடந்த ஏப்ரல், மே, ஜூன், ஜூலை ஆகிய நான்கு மாதங்களாக ரேஷன் கடைகளில் விலையில்லாப் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு கொண்டிருக்கின்றன. இந்நிலையில், வருகிற ஆகஸ்ட் மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் ஒன்றாம் தேதி முதல் பணம் கொடுத்துதான் பெற முடியும். ஆகஸ்ட் மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் வழங்குவதற்கான அறிவுரைகள் ரேஷன் கடை ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது.
அதன்படி அத்தியாவசிய பொருட்களை வழங்க கூடிய நாள் நேரம் ஆகியவற்றை குறிப்பிட்டு, ஆகஸ்ட் 1, 3, 4 ஆகிய தினங்களில் வீடுதோறும் சென்று டோக்கன்களை ரேஷன் கடை பணியாளர்கள் வழங்க வேண்டுமெனவும், ஒரு நாளுக்கு 225 குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன்கள் கட்டாயம் வழங்கப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் டோக்கனில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பொருட்கள் வழங்கப்படும் என்பதையும் காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு அறிவிக்க வேண்டும் எனவும், ஐந்தாம் தேதி முதல் ரேஷன் பொருட்களை முறையாக விநியோகம் செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
எக்காரணத்தைக் கொண்டும் பொருட்கள் இல்லை என குடும்ப அட்டைதாரர்கள் திருப்பி அனுப்பக்கூடாது, அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்யப்படும் நாட்களில் கடைகள் உரிய நேரத்தில் திறக்கப்பட வேண்டும், சமூக இடைவெளி கடைபிடிப்பது மற்றும் அடிப்படை பாதுகாப்புடன் மக்கள் வருவதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும், கட்டுப்பாட்டு பகுதியில் இருப்பவர்கள் வயதானவர்களுக்கு ரேஷன் கடை ஊழியர்களை நேரில் சென்று தகுந்த பாதுகாப்புடன் பொருட்களை வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் குறைந்தது 2 முகக்கவசம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வருகின்ற ஆகஸ்ட் 7ஆம் தேதி வெள்ளிக்கிழமை ரேஷன் கடை ஊழியர்களுக்கு விடுமுறையாக இருந்தாலும், அன்றும் ரேஷன் கடை செயல்படுத்தப்பட வேண்டும் எனவும் அதற்கு பதிலான மாற்றி விடுமுறை இன்னொரு நாள் அறிவிக்கப்படும் எனவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.