செங்கல்பட்டில் ரூ.250 கோடி சொத்தா.? மல்லை சத்யா குற்றச்சாட்டுக்கு வைகோ சொன்ன பதில்!

மல்லை சத்யா வைத்த குற்றச்சாட்டுகளுக்கு ஆவேசமாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆவேசமாக பதில் அளித்துள்ளார்.

Featured image

சென்னை : மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு செங்கல்பட்டு மாவட்டத்தில் 250 கோடி ரூபாய் சொத்து உள்ளதாக மல்லை சத்யா குற்றம் சாட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கடும் கோபத்துடன் பதிலளித்த வைகோ, “ஆலகால விஷத்தை கக்கும் நச்சுப்பாம்பு மல்லை சத்யா” என்று கடுமையாகத் தாக்கினார். “எனது நேர்மையை உலகமே அறியும். என் அரசியல் விரோதிகள்கூட இப்படிச் சொல்லத் துணியாத குற்றச்சாட்டு இது. இது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்” என்று வைகோ ஆவேசமாக மறுத்தார்.

தனது சொத்து விவகாரத்தில் தெளிவான விளக்கம் அளித்த வைகோ, “நான் செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தவன். என் பாட்டனார் சேர்த்த கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் இருந்தன. ஆனால் அரசியலுக்கு வந்த பிறகு அந்தச் சொத்துகளை எல்லாம் விற்றுவிட்டேன்” என்று கூறினார். பொது வாழ்க்கைக்காக தனிப்பட்ட செல்வத்தை முழுமையாகத் துறந்ததாகவும், “இந்தக் கரங்கள் கறைபடியாத கரங்கள்” என்றும் கூறினார்.

மல்லை சத்யாவின் குற்றச்சாட்டை “பொய்களின் உச்சம்” என்று வர்ணித்த வைகோ, தன்னைப் பற்றி இப்படிப்பட்ட அவதூறு பரப்புவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றார். “என் வாழ்நாள் முழுவதும் மக்கள் பணியிலும், தமிழ் உரிமைப் போராட்டத்திலும் கழிந்திருக்கிறது. இதுபோன்ற அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள் என் பயணத்தைத் தடுக்காது” என்று உறுதியாகத் தெரிவித்தார்.இந்தப் பதில் அறிக்கையை வைகோ தனது சமூக வலைதளப் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.

அதில், “என்னை அறிந்தவர்கள், என்னோடு பயணித்தவர்கள், என் தியாகங்களைப் பார்த்தவர்கள் இதுபோன்ற பொய்களை ஒருபோதும் நம்ப மாட்டார்கள்” என்று நம்பிக்கை தெரிவித்தார். தனது அரசியல் எதிரிகள் கூட இப்படி ஒரு குற்றச்சாட்டை வைக்கத் துணிவதில்லை என்று மீண்டும் வலியுறுத்தினார்.வைகோவின் இந்தக் கடுமையான பதில், மதிமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் ஆதரவைப் பெற்றுள்ளது. அதேநேரம், மல்லை சத்யாவுக்கும் வைகோவுக்கும் இடையிலான மோதல் மீண்டும் வெளிப்படையாக வெடித்திருப்பது, கட்சியின் உள் ஒற்றுமை குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.