சென்னை : தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய், முக்கிய அரசியல் தலைவர்களை ஒவ்வொருவராக நேரில் சந்தித்து வாழ்த்து பெற்று வருகிறார்.
இன்று காலை சட்டமன்ற உறுப்பினர்களின் பதவியேற்பு விழா நிறைவு பெற்றதும், முதலமைச்சர் விஜய் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை அவரது ஆழ்வார்பேட்டை இல்லத்தில் சந்தித்தார். மதியத்திலிருந்து ஸ்டாலின் இல்லத்தில் முன்னாள் அமைச்சர்கள் அன்பில் மகேஸ், எ.வ. வேலு, உதயநிதி ஸ்டாலின், அனிதா ராதாகிருஷ்ணன், சேகர் பாபு உள்ளிட்டோர் வருகை தந்திருந்த நிலையில், விஜய் அங்கு சென்றார்.
ஸ்டாலினும், உதயநிதியும் முதலமைச்சர் விஜயை ஆரத்தழுவி உற்சாகமாக வரவேற்றனர். பின்னர் இருவரும் பொன்னாடை போர்த்தி பரஸ்பரம் நலம் விசாரித்தனர். முதலமைச்சர் விஜய், ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார். எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதி ஸ்டாலின், “காலத்தின் நிறம் ‘கருப்பு சிவப்பு’ - திமுக 75” என்ற நூலை பரிசாக வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
அதன் பின்னர், முதலமைச்சர் விஜய் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை அவரது இல்லத்தில் சந்தித்தார். வைகோவின் மகன் துரை வைகோ, வெள்ளைத் துண்டு போர்த்தி மாலை அணிவித்து வரவேற்றார். சுமார் 13 நிமிடங்கள் நீடித்த இந்தச் சந்திப்புக்குப் பிறகு, விஜயும் வைகோவும் ஒன்றாக வெளியே வந்து தொண்டர்களுக்கு கையசைத்து வரவேற்பு அளித்தனர்.
அடுத்ததாக, முதலமைச்சர் விஜய் நீலாங்கரையில் உள்ள நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் இல்லத்திற்கு சென்றார். தனது இல்லத்திற்கு வருகை தந்த முதலமைச்சரை கட்சி நிர்வாகிகளுடன் வாசலில் காத்திருந்து சீமான் அன்போடு வரவேற்றார்.முதலமைச்சர் விஜய் தொடர்ந்து முக்கிய அரசியல் தலைவர்களை சந்தித்து வரும் இந்த நிகழ்வுகள், தமிழ்நாட்டில் புதிய அரசு அமைந்துள்ள சூழலில் அரசியல் நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.
