இபிஎஸ்-க்கு கெடு விதித்த செங்கோட்டையன்.., அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கம்.!

கே.ஏ. செங்கோட்டையன் இன்று முதல் கழக அமைப்புச் செயலாளர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் ஆகிய பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Edappadi Palaniswami -Sengottaiyan

சென்னை :முன்னாள் அமைச்சரும் அதிமுகவின் மூத்த தலைவருமான கே.ஏ. செங்கோட்டையன், அதிமுகவின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று (செப்டம்பர் 6) வெளியிட்ட அறிவிப்பின்படி, செங்கோட்டையன் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் மற்றும் கட்சியின் அமைப்பு செயலாளர் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்பு, செங்கோட்டையன் கட்சியில் ஒற்றுமைக்காக ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டி.டி.வி. தினகரன் ஆகியோரை இணைக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில், இன்றைய தினம், எடப்பாடி பழனிசாமி திண்டுக்கல்லில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் இந்த முடிவை எடுத்துள்ளார். இது அதிமுகவில் உட்கட்சி பூசலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

அதாவது, நேற்றைய தினம் செய்தியாளர் சந்திப்பில் பேசிய செங்கோட்டையன், கட்சியில் பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்க 10 நாள் கெடு விதித்து, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பகிரங்கமாக பேசிய நிலையில், அதிமுக அமைப்புச் செயலாளர் பொறுப்பிலும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பிலும் இருக்கும் செங்கோட்டையன் இன்று முதல் அப்பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

மேலும், செங்கோட்டையனின் இந்த நீக்கம் குறித்து சமூக ஊடகங்களில் பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன. செங்கோட்டையன் எடுக்கவிருக்கும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தெளிவான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை, ஆனால் இது அதிமுகவின் உள் அரசியலில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தலாம்.