திருவண்ணாமலை அருகே சிறுமிக்கு பாலியல் கொடுமை - அண்ணாமலை கண்டனம்!

சிறுமி பாலியல் வன்கொடுமை திமுக அரசின் சட்டம் ஒழுங்கு தோல்விக்கு முழு சாட்சி என அண்ணாமலை கூறியுள்ளார்.

Hero Image

திருவண்ணாமலை: மாவட்டம், செய்யாறு அருகே சுப நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை நடைபெற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கொடூரச் சம்பவத்துக்கு பாஜக முன்னாள் தமிழக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது “திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே, சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை நடந்ததாக வந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியும் கோபமும் அளிக்கிறது.

இதுபோன்ற கொடூரங்கள் மீண்டும் மீண்டும் நடைபெறுவது, திமுக அரசின் சட்டம் ஒழுங்கு தோல்விக்கு முழு சாட்சி.தமிழகத்தில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு என்பதே இல்லாத நிலை ஆகிவிட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளில், கட்டுக்கடங்காத போதைப் பொருள் புழக்கம், சட்டத்தின் மீதோ, காவல்துறை மீதோ, குற்றவாளிகளுக்கு எந்த அச்சமும் இல்லாத நிலை என, தமிழகம் ஒரு இருண்ட நிலைக்குப் போய்விட்டது.

இவற்றைச் சரிசெய்து, தமிழகத்தை மீட்டெடுக்கவே, சில காலம் தேவைப்படும். இத்தகைய மோசமான சூழலில், திமுக ஆட்சி, இன்று தமிழகத்தைத் தள்ளியிருக்கிறது.இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரையும் உடனடியாக கைது செய்து, கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.

சிறுமிக்கும் குடும்பத்தினருக்கும் முழு பாதுகாப்பும், மனநல ஆலோசனைகளும் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” எனவும் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில், அண்ணாமலையின் கண்டனம் அரசியல் களத்தில் புதிய விவாதத்தைத் தொடங்கியுள்ளது.