கிறிஸ்துமஸ் அன்றும் அதிர்ச்சி...அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.1,02,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது

Gold Price Today

சென்னை :ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (டிசம்பர் 25, 2025) மீண்டும் உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.20 உயர்ந்து ரூ.12,820-க்கும், ஒரு சவரன் ரூ.160 உயர்ந்து ரூ.1,02,560-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இது வரலாறு காணாத உச்ச விலையாகும்.கடந்த 15-ஆம் தேதி தங்கம் விலை முதல்முறையாக ஒரு லட்சத்தை தாண்டிய நிலையில், தற்போது தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆண்டு இறுதிக்குள் ரூ.1 லட்சத்தை தொடும் என கணிக்கப்பட்டது போலவே அது நிகழ்ந்தது. உலக தங்க கவுன்சில் கணிப்பின்படி, 2026 இறுதிக்குள் ரூ.2 லட்சத்தை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.சர்வதேச பொருளாதார சூழல், பங்குச் சந்தை மாற்றங்கள், முதலீட்டு தேவை அதிகரிப்பு ஆகியவை தங்கம் விலையை தினந்தோறும் உயர்த்தி வருகின்றன.

இந்த உயர்வு நகைப் பிரியர்கள், திருமண விசேஷங்களுக்காக நகை வாங்கத் திட்டமிட்டுள்ளவர்கள் மற்றும் முதலீட்டாளர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.தங்கத்துக்கு இணையாக வெள்ளி விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.1 உயர்ந்து ரூ.245-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,45,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதுவும் வரலாறு காணாத உச்சமாகும்.இந்த தொடர் விலை உயர்வு பொதுமக்களை பாதித்துள்ள நிலையில், சந்தை ஆய்வாளர்கள் அடுத்த சில நாட்களில் விலை ஏற்ற இறக்கமாக இருக்கலாம் என்று கணிக்கின்றனர். இருப்பினும், தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வு தொடரும் போக்கு நீடிக்கலாம் என்று எச்சரிக்கின்றனர்.