திமுக ஆட்சி தொடர்ந்தால்தான் தமிழ்நாட்டிற்கு விடிவுகாலம் – வைகோ ஸ்பீச்!

தமிழ்நாட்டின் பொற்காலமான திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும் என வைகோ தெரிவித்துள்ளார்.

Vaiko Speech

சென்னை :மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் சமத்துவ நடைபயணம் இன்று திருச்சியில் இருந்து தொடங்குகிறது. தென்னூர் உழவர் சந்தை அருகே நடைபெறும் தொடக்க விழாவில் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் நடைபயணத்தைத் தொடங்கி வைத்தார்.

அதன்பிறகு மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் சமத்துவ நடைபயண தொடக்க விழாவில் பேசிய அவர், “தமிழ்நாட்டின் பொற்காலமாக அமைந்திருக்கும் திராவிட மாடல் ஆட்சி தொடர்ந்தால் தான் தமிழ்நாட்டுக்கு விடிவுகாலம். எனவே தேர்தல் களத்தில் திமுகவையும் அதன் கூட்டணிக் கட்சிகளையும் வெற்றி பெறச் செய்யுங்கள்” என்று வலியுறுத்தினார்.

கடந்த தேர்தலில் பெற்ற வெற்றியை விட இந்தாண்டு நடைபெறும் தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றி பெறும் என்று உறுதியளித்தார்.“தமிழ்நாட்டில் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம். வட மாநிலங்களைப் போல இங்கே மோதல் இல்லை. சாதி, மத மோதல்களுக்கு இடமில்லை. இதை எடுத்துரைக்கத்தான் இந்த சமத்துவ நடைபயணம்” என்று வைகோ தெரிவித்தார். சனாதன சக்திகளால் ஜனநாயகத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளைப் பாராட்டிய வைகோ, இந்த ஆட்சி தொடர்வது தமிழ்நாட்டின் எதிர்காலத்துக்கு அவசியம் என்று வலியுறுத்தினார். திமுக கூட்டணியின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் இந்த நடைபயணம் அமைந்துள்ளது என்று கூறினார்.இந்த சமத்துவ நடைபயணம் திருச்சியில் இருந்து மதுரை வரை நடைபெற உள்ளது. சமூக நீதி, சமத்துவம், ஒற்றுமை ஆகியவற்றை வலியுறுத்தும் இந்தப் பயணம் தமிழக அரசியலில் புதிய அலை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வைகோவின் உரை தொண்டர்களிடம் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.