ஹிந்தி படிப்பதில் உங்களுக்கு என்ன கஷ்டம்.? தமிழிசை ஆவேசம்.!
நம் நாட்டில் இருக்கும் இன்னொரு மொழியை மாணவர்கள் படிப்பதில் திமுகவுக்கு என்ன கஷ்டம் என தமிழிசை சௌந்தராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை : தமிழக அரசு தேசிய கல்வி கொள்கையை இன்னும் ஏற்கவில்லை. பி.எம் ஸ்ரீ திட்டத்தில் இன்னும் தமிழக அரசு சேரவில்லை. அதனால், தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு மத்திய அரசு அளிக்க வேண்டிய உட்கட்டமைப்பு நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. அரசியல் களத்தில் இதுகுறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது.
தேசிய கல்வி கொள்கையை தமிழக அரசு ஏற்காதது குறித்து முன்னாள் பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தராஜன், தமிழக அரசு மீதான தனது விமர்சனங்களை முன்வைத்தார். அவர் கூறுகையில், ” மும்மொழி கொள்கை பற்றி அவர்களுக்கு (தமிழக அரசு) என்ன தெரியும்.? பிரான்ஸ் நாட்டு நிறுவனத்தோடு இணைந்து பிரெஞ்சு படிப்பதற்கு தமிழக அரசு ஒப்பந்தம் போடுகிறார்கள்.
ஆனால், நம் நாட்டில் இருக்கும் இன்னொரு மொழியை (ஹிந்தி) மாணவர்கள் படிப்பதில் உங்களுக்கு (திமுக) என்ன கஷ்டம்.? தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளியில் ஹிந்தி கற்றுக்கொடுக்கப்படவில்லையா.? அரசு பள்ளி மாணவர்கள் இன்னொரு மொழி கற்றுக்கொள்ள கூடாதா.? அரசுப்பள்ளி மாணவர்களின் வாய்ப்பை தமிழக அரசு தடுக்கிறது.
மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை என்றால், திமுகவிடம் நிறைய நிதி இருக்கிறது. தயாநிதி, உதயநிதி, கருணாநிதி, அருள் நிதி, இன்ப நிதி என நிறைய நிதி உள்ளதே. தேசிய கல்விக்கொள்கை பற்றி தவறான கருத்துக்களை பரப்புகின்றனர். உலக அரங்கிற்கு நமது மாணவர்கள் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் தேசியக் கல்விக் கொள்கை கொண்டுவரப்பட்டது. அதனை தமிழ்நாடு அரசு தடுத்து கொண்டிருக்கிறது” என தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறினார்.
பி.எம் ஸ்ரீ எனும் மத்திய அரசு திட்டத்தினை தமிழக பள்ளிக்கல்வித்துறை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதற்காக நடப்பாண்டில் பள்ளிக்கல்வித்துறை உட்கட்டமைப்புக்கு அளிக்க வேண்டிய நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. பி.எம் ஸ்ரீ திட்டமானது தேசிய கல்வி கொள்கை போன்று மும்மொழி கல்வி கொள்கை கொண்டுள்ளது என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறை ஏற்க மறுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.