செங்கல்பட்டு :திருப்போரூர் அருகே கார் மோதி 5 பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பகுதியில் உள்ள பண்டிதமேடு ஓ.எம்.ஆர். என்ற சாலையில் பெண்கள் மாடு மேய்த்துக் கொண்டிருந்தனர். அப்போது 5 பெண்கள் அங்கு சாலையை கடக்க முயன்ற போது அந்த பகுதியில் அதி வேகத்தில் வந்த கார் ஒன்று அந்த பெண்கள் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த சம்பவத்தில் அந்த 5 பெண்களும் காற்றில் வீசப்பட்ட சம்பவ இடத்திலே துடிதுடித்து உயிரிழந்தனர். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் ஒன்றாக சேர்ந்து விபத்து ஏற்படுத்திய 2 பேரை மடக்கி பிடித்தனர். உடனடியாக காவல்துறையினருக்கும் தகவல்கள் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு உடனடியாக காவல்துறையினரும் வந்தனர்.
காவல்துறை வரும் வரை உயிரிழந்த பெண்களின் உறவினர்கள் விபத்து ஏற்படுத்திய அந்த இரண்டு பேரையும் விடாமல் கடுமையாக தாக்கினார்கள். அது மட்டுமின்றி உறவினர்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். பின் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உறவினர்களிடம் நீண்ட நேரம் பேச்சுவார்த்தைக்கு பிறகு விபத்து ஏற்படுத்தியவர்களை காவல் நிலையம் அழைத்து சென்றனர்.
இந்த விபத்து சம்பவம் தொடர்பாக காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில், விபத்தை ஏற்படுத்தியது கல்லூரி மாணவர்கள் என்பதும் அவர்கள் போதையில் இருந்ததும் தெரியவந்ததுள்ளது. மேலும், உயிரிழந்த 5 பெண்களும் பண்டிதமேடு பகுதியை சேர்ந்த விஜயா, கௌரி, யசோதா, லோகாம்பாள், ஆனந்தம்மாள் என்பதும் தெரியவந்துள்ளது.
இந்த விபத்து சம்பவத்தை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் போதையில் இவ்வளவு வேகமாகவா வருவது?கண்டிப்பாக விபத்து ஏற்படுத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறி வருகிறார்கள்.
