கோவை :புறநகர் பகுதியில் கல்லூரி மாணவி ஒருவரை கடந்த மாதம் இருசக்கர வாகனத்தில் இழுத்துச் சென்று மூன்று இளைஞர்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த வழக்கில் கைதான கருப்பசாமி (24), கார்த்தி (23), தவசி (26) ஆகிய மூவரின் புகைப்படங்களும் பின்னணியும் தற்போது வெளியாகியுள்ளன. மாணவியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் மூவரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் வெளியான தகவல்கள் பொதுமக்களிடையே பீதியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளன.
போலீஸ் வட்டார தகவலின்படி, வன்கொடுமை நடப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாகவே இந்த மூவர் கும்பல் ஒரு முதியவரைக் கொலை செய்திருக்கலாம் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. திருட்டு இருசக்கர வாகனத்தில் மது அருந்தச் சென்றபோது, அந்தப் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் அவர்களைத் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், ஆத்திரத்தில் அவரைத் தாக்கி கொலை செய்ததாகத் தெரிகிறது.
கொலை செய்த பிறகு அதே இருசக்கர வாகனத்தில் தப்பிச் செல்லும் வழியில் மாணவியைப் பார்த்து இழுத்துச் சென்று வன்கொடுமை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.கைதான மூவரும் கோவை புறநகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும், முன்பே திருட்டு, கொள்ளை உள்ளிட்ட பல வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை ஆகிய இரு பெரும் குற்றங்களையும் ஒரே இரவில் செய்தது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
சம்பவ இடத்தில் இருந்து கிடைத்த ஆதாரங்கள், மூவரின் செல்போன் தகவல்கள், மாணவியின் அடையாளம் காட்டல் ஆகியவை வழக்கை வலுப்படுத்தியுள்ளன.இந்தச் சம்பவம் கோவை மாவட்டத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவிகளின் பாதுகாப்பு குறித்து பொதுமக்களும், அரசியல் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். வழக்கை விரைவுபடுத்தி குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என பெண்கள் அமைப்புகளும் மாணவர் அமைப்புகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
