சென்னை :தமிழ்நாடு அரசின் எரிசக்தி துறையின் முதன்மைச் செயலாளர் ஐஏஎஸ் அதிகாரி பீலா வெங்கடேசன், உடல்நலக்குறைவு காரணமாக நேற்றைய தினம் சென்னையில் காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் இன்று மாலை பெசண்ட் நகர் மைதானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.
பீலா வெங்கடேசன், தமிழக எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளராகவும், கொரோனா தொற்றுநோய் காலத்தில் சுகாதாரத்துறை செயலாளராகவும் பணியாற்றியவர். அவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அவரது உடல் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து இறுதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, மாலை தகனம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐஏஎஸ் அதிகாரி பீலா
MBBS படித்த பீலா, 1997ஆம் ஆண்டு IAS தேர்வில் வெற்றி பெற்றார். 1998-2000 பீகார் மற்றும் ஜார்க்கண்டில், பின்னர் தமிழகத்தில் செங்கல்பட்டு சார் ஆட்சியராகவும் முதல்வரின் தனிப்பிரிவு சிறப்பு அதிகாரியாகவும் பணியாற்றினார்.
சமூக நலத்துறை மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறையில் பணியாற்றிய பின்னர், 2003-2007 ஜார்க்கண்ட், பின்னர் மத்திய ஜவுளித் துறையில் 2014 வரை சேவை செய்தார்.
தமிழகத்தில் 2019-2020 கொரோனா காலத்தில் சுகாதாரத் துறை செயலாளராக மக்களை காப்பாற்றும் பணியில் முன்னணி வகித்து, பின்னர் கடைசியாக எரிசக்தித் துறை செயலாளராக பணியாற்றினார்.
