சென்னை :மாநகராட்சியின் இராயபுரம் மற்றும் திரு.வி.க. நகர் மண்டலங்களில் குப்பை அகற்றும் பணி தனியார்மயமாக்கப்பட்டதைக் கண்டித்தும், பணி நிரந்தரம் கோரியும், கடந்த 12 நாட்களாக ரிப்பன் மாளிகை முன்பு அறவழியில் போராட்டம் நடத்தி வந்த தூய்மைப் பணியாளர்களை, ஆகஸ்ட் 13, 2025 நள்ளிரவில் காவல்துறையைக் கொண்டு கைது செய்து தமிழக அரசு அப்புறப்படுத்தியதற்கு, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது “உரிமைகளுக்காக அறவழியில் போராடியவர்கள் மீது அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விடுவது கண்டிக்கத்தக்கது மற்றும் மன்னிக்க முடியாதது,” என்று அவர் கூறினார்.அன்புமணி மேலும் கூறுகையில், “தமிழக அரசு நினைத்திருந்தால், முதல் நாளிலேயே இந்தப் போராட்டத்திற்கு தீர்வு கண்டிருக்க முடியும். சென்னை மாநகராட்சியே குப்பை அகற்றும் பணியை மேற்கொள்ள வேண்டும், தூய்மைப் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என்பது அவர்களின் நியாயமான கோரிக்கை. இதை நிறைவேற்றுவதில் அரசுக்கு எந்த சிக்கலும் இல்லை.
தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் தொகையில், தூய்மைப் பணியை இன்னும் சிறப்பாகச் செய்ய முடியும், மேலும் பணியாளர்களுக்கு கூடுதல் ஊதியமும் வழங்க முடியும். ஆனால், அரசுக்கு அதற்கு மனமில்லை,” என்று விமர்சித்தார்.“போராட்டம் 12-வது நாளாக நீடித்த நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் போராட்டக்காரர்களை அழைத்து பேசியிருக்க வேண்டும். அவ்வாறு பேசியிருந்தால், இந்த சிக்கலுக்கு தீர்வு கிடைத்திருக்கக் கூடும். ஆனால், முதலமைச்சருக்கு திரைப்படங்களைப் பார்ப்பதற்கே பொழுது போதவில்லை.
ஒருவேளை, சமூகநீதியில் சிறந்தவராகக் கருதப்படும் மு.க. ஸ்டாலின், தூய்மைப் பணியாளர்களை சந்தித்து பேசுவது தமக்கு தகுதி குறைவு என்று நினைத்தாரோ?” என்று அன்புமணி கேள்வி எழுப்பினார். நள்ளிரவு கைது நடவடிக்கையை அன்புமணி கடுமையாக விமர்சித்து, “ஏழை, எளிய மக்களான தூய்மைப் பணியாளர்களை அடக்குமுறையால் அகற்றுவது வீரமல்ல, கோழைத்தனம். அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதே வீரமாகும். இந்தக் கொடூரமான நடவடிக்கை, தமிழ்நாட்டில் மக்களாட்சி இல்லை, கொடுங்கோலாட்சிதான் நடக்கிறது என்பதை உறுதிப்படுத்துகிறது,” என்று கூறினார்.
இந்த நடவடிக்கையால், சென்னையில் குப்பைகள் தேங்கி, சுகாதார நெருக்கடி மோசமடைந்துள்ளது.“அராஜகமாக கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். அவர்களின் கோரிக்கைகளை முன்வைத்து அறவழியில் போராடுவதற்கு மாற்று இடம் வழங்கப்பட வேண்டும். இந்த அடக்குமுறையை மேற்கொண்ட திமுக அரசை, தமிழ்நாட்டு மக்கள் அகற்றும் நாள் வெகு தொலைவில் இல்லை,” என்று அன்புமணி எச்சரித்தார்.
