தஞ்சாவூர்: தஞ்சாவூரில் நடைபெற்ற பூண்டி கலைவாணன் இல்லத் திருமண நிகழ்வில் பங்கேற்ற திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், சட்டமன்றத் தேர்தல் தோல்வி குறித்து உணர்ச்சிபூர்வமாகப் பேசினார்.ஸ்டாலின் பேசுகையில், “தோல்வி, வெற்றி என்பது இரண்டையும் சமமாகக் கருதி தொடர்ந்து பாடுபட்டுக் கொண்டிருக்கக்கூடிய தொண்டன் தான் திமுக என்பதை யாரும் மறுக்க முடியாது.
ஏதோ இன்றைக்கு நடைபெற்று முடிந்த தேர்தலில் நாம் படுதோல்வி அடைந்துவிட்டது போல, திமுகவின் கதை முடிந்துவிட்டது என்று சிலர் கவிதை இரங்கல் பாடுகிறார்கள். நம்முடைய இன எதிரிகள் அந்தச் சூழ்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்” என்றார்.மேலும் அவர், “திமுக பொறுத்தவரை எத்தனையோ தேர்தல்களைப் பார்த்திருக்கிறது.
1949-ல் தொடங்கி, 1952, 1957, 1962, 1967, 1971, 1977 என பல தேர்தல்களில் பல வெற்றிகளையும், பல தோல்விகளையும் சந்தித்திருக்கிறோம். ஆனால் தோல்வி அடையும் நேரத்தில்தான் திமுக ஒரு ஃபீனிக்ஸ் பறவை போல் கிளர்ந்து எழும்” என்று உறுதியுடன் தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர் “நாம் தான் இன்றைக்கு ஆட்சியில் இருக்கிறோம். நம்முடைய திட்டங்களைப் பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஐந்து வருஷம் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது ஏழை எளிய மக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், மாணவர்கள், பெண்கள், ஆசிரியர்கள் என எல்லா தரப்பு மக்களுக்கும் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றிய திராவிட மாடல் ஆட்சியை யாரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது” என்றார்.
மேலும், “புதிய ஆட்சிக்கு வாழ்த்து சொல்லும்போதே, திராவிட மாடல் ஆட்சியில் நிறைவேற்றிய திட்டங்களைத் தொடர்ந்து நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தேன். அந்தக் கோரிக்கை இன்று எப்படி நிறைவேற்றப்படுகிறது என்பதை கண்கூடாகப் பார்க்கிறோம்” என்று ஸ்டாலின் கூறினார்.
மேலும், “நாம் சோகப்பட வேண்டிய அவசியம் இல்லை. தோல்வியிலும் திமுக எப்போதும் ஃபீனிக்ஸ் பறவை போல் எழும். இந்த இயக்கம் தொடர்ந்து வலுவுடன் செயல்படும்” என்று ஸ்டாலின் உறுதியளித்தார்.திருமண நிகழ்வில் பங்கேற்ற ஸ்டாலினின் இந்தப் பேச்சு, திமுக தொண்டர்களுக்கு புத்துணர்ச்சியையும், நம்பிக்கையையும் அளித்துள்ளது. தோல்வியைத் தாண்டி கழகத்தை வலுப்படுத்தும் நோக்கில் திமுக தலைமை செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
