சென்னை :திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில், தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு விசாரணை மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடர்கிறது. நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் அடங்கிய அமர்வு முன் தர்கா தரப்பு வாதங்களை முன்வைத்தது. “தனி நீதிபதி உத்தரவில் மத நல்லிணக்கம், அமைதி, சட்டம்-ஒழுங்கு எதுவும் கவனிக்கப்படவில்லை. சட்ட விதிகளைப் பின்பற்றவில்லை” என்று தர்கா தரப்பு குற்றம் சாட்டியது.
தர்கா தரப்பு, “நெல்லித்தோப்பு பகுதியில் இஸ்லாமியர்கள் தொழுகை செய்தபோது இந்து முன்னணி எதிர்ப்பு தெரிவித்தது. ஆடு, கோழி பலி என்று ஆதாரமின்றி குற்றம் சாட்டினர். உரிமையியல் நீதிமன்றத்தை அணுகச் சொன்னார்கள். அதே கருத்து தீபம் ஏற்றுவதற்கும் பொருந்தும்” என்று வாதிட்டது. ஒவ்வொரு ஆண்டும் கோவில்-தர்கா தரப்புக்கு இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடப்பதாகவும், தர்காவில் இருந்து குறிப்பிட்ட தூரம் தாண்டி தீபம் ஏற்றலாம் என்ற தனி நீதிபதி உத்தரவு ஏற்புடையது அல்ல என்றும் கூறினர்.
“சிக்கந்தர் தர்கா இஸ்லாமியர்களுக்கு பாத்தியதா, ஆனால் கழிவறை, மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் செய்ய முடியவில்லை. உரிமையியல் நீதிமன்றத்தை அணுக உத்தரவிடப்பட்டது. தனி நீதிபதி உத்தரவில் ‘படையெடுப்பு, ஆக்கிரமிப்பு’ என்று குறிப்பிட்டது எங்களைப் பாதிக்கிறது” என்று தர்கா தரப்பு வேதனை தெரிவித்தது. தூண் தர்காவில் இருந்து 15 மீட்டர் தொலைவில் உள்ளது என்றும், தனி நீதிபதி 50 மீட்டர் என்று தவறாகக் குறிப்பிட்டதாகவும் சுட்டிக்காட்டினர்.
தர்கா தரப்பு மேலும், “மலை உச்சியில் கொடியேற்ற கோரிக்கைக்கு கோவில் தரப்பு கடும் ஆட்சேபம் தெரிவித்தது. புதிய பழக்கங்களை அனுமதிக்க முடியாது என்று கோவில் தரப்பு கூறியது. அதே வழக்கில் உரிமையியல் நீதிமன்றத்தை அணுக உத்தரவிடப்பட்டது. ஒரே மாதிரி கோரிக்கைகளுக்கு வெவ்வேறு உத்தரவுகள் வருவது தவறு” என்று வாதிட்டது.விசாரணை தொடர்கிறது. இந்த வழக்கு மத நல்லிணக்கம், பாரம்பரிய உரிமைகள், சட்டம்-ஒழுங்கு ஆகியவற்றை மையப்படுத்திய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வரை அரசுத் தரப்பு, கோயில் தரப்பு மற்றும் தர்கா தரப்பு வாதங்கள் முடிவடைந்துள்ளன. அடுத்து, தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக வழக்கறிஞர் லஜபதி ராய் வாதங்களை தொடங்கியுள்ளார்.
