அகவிலைப்படி, போனஸ், திருமணத் தொகை.., அரசு ஊழியர்களுக்கான 9 அறிவிப்புகள் இதோ…
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு ஊழியர்களுக்கான 9 புதிய அறிவிப்புகளை பேரவையில் அறிவித்துள்ளார்.

சென்னை : இன்று அரசு ஊழியர்கள் மற்றும் காவலத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு ஊழியர்களுக்கான சிறப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். ஓய்வூதியம், அகவிலைப்படி, மகப்பேறு விடுப்புகள் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் வெளியாகின.
அதில், அரசு ஊழியர்களுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த 9 அறிவிப்புகளை கிழே காணலாம்.
- கோவிட் 19 காலத்தில் அரசுக்கு ஏற்பட்ட பெரும் நிதிச்சுமை காரணமாக நிறுத்திவைக்கப்பட்டு இருந்த அரசு ஊழியர்களின் விடுமுறையை சமன் செய்யும் வகையில் 1.4.2026 முதல் 15 நாட்கள் வரை சமன் செய்திடவும், பணபலன் அனுபவித்திடவும் நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த அறிவிப்பை இந்தாண்டே செயல்படுத்திட அரசு ஊழியர்கள் கோரிக்கை வைத்ததன் பெயரில் அரசு அலுவலகலர்கள் விடுப்பு நாட்கள் 01.10.2025-க்குள் சரன் செய்திட உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 8 லட்சம் அரசு ஊழியர்கள் பயன் பெறுவார்கள். இதற்கு அரசுக்கு ஆண்டுக்கு ரூ.3,561 கோடி கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
- மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏற்கனவே 2% அகவிலைப்படி உயர்ந்துள்ளதை போல, மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 01.01.2025 முதல் 2% உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 16 லட்சம் அரசு ஊழியர்கள் பயன்பெறுவர். இதன் மூலம் அரசுக்கு ரூ.1,252 கோடி கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பண்டிகைகால கொண்டாட்டத்திற்கு ரூ.10 ஆயிரம் முன்பணத் தொகை, ரூ.20 ஆயிரமாக உயர்த்த அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் 8 லட்சம் அரசு பணியாளர்கள் பயன்பெறுவார்கள்.
- அரசு பணியாளர்களின் குழந்தைகள் உயர்க்கல்வி பயில கல்வி முன்பணம் இந்தாண்டு முதல் தொழிற்படிப்புக்கு ரூ.1 லட்சம் வரை உயர்த்திடவும், கலை, அறிவியல், பாலிடெக்னிக் பயில ரூ.50 ஆயிரம் உதவித்தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
- அரசு பணியாளர்கள், ஆசிரியர்களின் தேவையின் அடிப்படையில் திருமண முன்பணம் பெண்களுக்கு ரூ.10 ஆயிரமும், ஆண்களுக்கு ரூ.6 ஆயிரமும் வழங்கப்பட்டு வந்தது பலமடங்கு உயர்த்தி ரூ.5 லட்சம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
- அரசு ஓவிஊதியத்தார்கள் சி, டி பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவு ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகை ரூ.500-ல் இருந்து ரூ.1000ஆக உயர்த்தி வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ரூ.24 கோடி கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.
- ஓய்வூதியதாரர்கள் பண்டிகை முன்பணம் ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.6 ஆயிரமாக உயர்த்தப்படும் என்றும், இதன் மூலம் 52 ஆயிரம் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள் என்றும், இதன் மூலம் ரூ.10 கோடி அரசுக்கு ஆண்டுக்கு கூடுதல் நிதி செலவாகும்.
- பழைய ஓய்வூதிய திட்டம், புதிய ஓய்வூதிய திட்டம், ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் ஆகியவை குறித்து ஆய்வு செய்ய ஒரு குழு அமைத்துள்ளோம். அந்த அறிக்கை செப்டம்பர் 30க்குள் சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
- மகப்பேறு விடுப்பு காலம் 9 மாதத்தில் இருந்து 12 மாத காலமாக உயர்த்தப்பட்டு அது நடைமுறையில் உள்ளது. அந்த விடுமுறை காலம் பணி காலமாக கருதப்படாத காரணத்தால் அவர்களின் பதவி உயர்வு காலதமாதமாகிறது. அதனை தடுக்கும் பொருட்டு இனி மகப்பேறு விடுப்பு காலத்தை அரசு பணநாளாக கருத உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கான 9 புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.