கொடைக்கானல் : சென்னை எப்போதுமே திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) உறுதியான கோட்டையாகவே இருந்து வருகிறது என்று தமிழ்நாடு அமைச்சர் சேகர்பாபு உறுதியாகக் கூறியுள்ளார்.கொடைக்கானலில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து பேசினார்.
அவர் கூறியதாவது“சென்னை எப்போதுமே திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்டைதான். வாக்குச் சதவீதத்தைப் பார்த்தாலும், 2021 மற்றும் 2024 ஆம் ஆண்டு தேர்தல்களில் சென்னையில் திமுகவுக்கு நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் கிடைத்தன. அதேபோல, இப்போது நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலிலும் வாக்கு வித்தியாசம் பெரிய அளவில் பதிவாகியுள்ளது.
பதிவான கணக்கை எடுத்துக்கொண்டால், பெரிய அளவு வாக்கு வித்தியாசம் இல்லை என்றாலும், சென்னை எப்போதும் போல் தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்டையாகவே இருக்கும் என்று உறுதியாக நம்புகிறோம்.இது திமுகவின் உற்சாகத்துக்கு ஒரு அடையாளம். கடுமையான உழைப்பும், மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் மதிநுட்பமும், தேர்தல் நிபுணர்களின் ஆலோசனையும், களப்பணியும் ஒன்றிணைந்து இந்த வெற்றியைத் தந்துள்ளன.
2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே, 2021 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அவர் ஆற்றிய களப்பணி, நமது இயக்கத்தை முழுமையாக இயக்கியது. அதே உழைப்பும், திட்டமிடலும் 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும், 2022 உள்ளாட்சித் தேர்தலிலும் எதிரொலித்தன.இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை, நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததிலிருந்து பல்வேறு கோணங்களில் ‘தமிழ்நாடு வெல்வோம்’ என்ற குறிக்கோளுடன், பல்வேறு திசைகாட்டிகளை உருவாக்கி, இயக்கமும் மக்களும் ஒன்றாகப் பின்னிப் பிணைந்து செயல்பட்டோம்.
கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகக் களத்தில் நின்று, எல்லை காக்கும் ராணுவத்தினர் போல உழைத்த அனைவரும் இப்போது சற்று இளைப்பாறும் வகையில் இந்த மகிழ்ச்சியான சூழலில் சுற்றுலா வருகிறார்கள்.”இதன் பின்னர், த.வெ.க அமைச்சரவை பட்டியல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, அமைச்சர் சேகர்பாபு “இல்லாத ஊருக்குப் போகாத வழியைக் காட்டுவது போல் உள்ளது” என்று கூறி, பதிலைத் தவிர்த்தார்.
