200 தொகுதிகளுக்கு மேல் த.வெ.க வெற்றிப்பெறும் - செங்கோட்டையன்!

200 இடங்களில் தவெக வெற்றி பெறும். விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Hero Image

தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) தலைவர் விஜய் 200 இடங்களில் வெற்றி பெற்று தமிழ்நாட்டை ஆள்வார் என்று செங்கோட்டையன் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், எக்ஸிட் போல் முடிவுகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, தந்தி டிவியின் ஆன்லைன் சர்வேயைச் சுட்டிக்காட்டி பதிலளித்தார்.

அவர் கூறியதாவது“உங்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன். தந்தி டிவி ஒரு ஆன்லைன் சர்வே எடுத்திருக்கிறார்கள். இரண்டு லட்சத்து ஐம்பதாயிரத்து எண்ணூற்று எட்டு பேரிடம் எடுத்திருக்கிறார்கள். ஒரு ஆன்லைன் போலிங்கில் ஒவ்வொரு நபரும் ஒரு பட்டனை மட்டுமே அழுத்த முடியும். அந்த சர்வேயில் அவர்கள் கொடுத்த முடிவைப் பார்த்தால், த.வெ.க 120க்கு மேல் இடங்களில் வெற்றி பெறும் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால் நான் உங்களுக்கு ஒன்று தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

இதுவரை எல்லா தேர்தல்களிலும் நாம் பார்த்திருக்கிறோம். இலங்கையிலும், நேபாளத்திலும், வங்கதேசத்திலும், பஞ்சாபிலும் கருத்துக் கணிப்புகள் முழுக்க முழுக்க தவறாகிவிட்டன. கருத்துக் கணிப்புகள் மக்களின் உண்மையான அலையை ஒருபோதும் பிரதிபலிப்பதில்லை.இப்போது தமிழ்நாட்டில் நடக்கப் போகிறது ஒரு புரட்சி. பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி, இனப் புரட்சி, சோஷலிசப் புரட்சி என்று பல புரட்சிகளை இந்தியா பார்த்திருக்கிறது.

ஆனால் இப்போது தமிழ்நாட்டில் நடக்கப் போகிறது விசில் புரட்சி. தளபதி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் விசில் புரட்சி தமிழ்நாட்டில் மட்டுமல்ல, உலக அளவிலும் வரலாறாகப் பதிவாகப் போகிறது.200 இடங்களில் த.வெ.க வெற்றி பெறும். விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார். இது மக்களால் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட ஒன்று.” எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார்.