தவெக குதிரை பேரம் செய்கிறது...காவல்துறையில் புகார் கொடுத்த டிடிவி!

அனைத்து கட்சிகளின் ஆதரவு கடிதங்களையும் ஆளுநர் ஆய்வு செய்ய வேண்டும் என டிடிவி தெரிவித்துள்ளார்.

Hero Image

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைக்கும் முயற்சியில், அமமுக எம்எல்ஏ எஸ்.காமராஜ் பெயரில் போலி ஆதரவுக் கடிதம் ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தமிழக அரசியல் வட்டாரம் சூடுபிடித்துள்ள நிலையில், நேற்று இரவு இரண்டாவது முறையாக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்துவிட்டு வெளியே வந்த டிடிவி தினகரன், செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தபோது இந்த விவகாரத்தை முதன்முதலில் வெளியிட்டார்.

மன்னார்குடி தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எஸ்.காமராஜ், தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாக எந்தக் கடிதத்தையும் வழங்கவில்லை என்றும், ஆனால் அவரது பெயரில் போலி கடிதம் தயாரிக்கப்பட்டு ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தினகரன் குற்றம் சாட்டினார்.

இதுகுறித்து காமராஜிடம் விசாரித்தபோது, அத்தகைய கடிதத்தை தான் வழங்கவில்லை என்று அவர் தெரிவித்ததாகவும், எனவே இது தூய சக்தி எனக் கூறிக்கொள்ளும் சிலரின் மோசடி நடவடிக்கை என்றும் தினகரன் விளக்கினார். இதனை அடுத்து, ஆளுநர் மாளிகைக்கு புகார் அளிக்க வந்ததாகவும், அப்போது காமராஜை தொடர்புகொள்ள முடியாததால் அவர் காணவில்லை என்று பேட்டியளித்ததாகவும் தினகரன் தெரிவித்தார்.

தவெக தரப்போ, எஸ்.காமராஜ் தவெக ஆட்சிக்கு ஆதரவளிப்பதாக கையெழுத்திட்ட வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த விவகாரம் தமிழக அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.டிடிவி தினகரன் மேலும் கூறுகையில், “தவெக ஆட்சியமைப்பதற்கு ஆதரவாக வந்துள்ள கடிதங்கள் அனைத்தையும் ஆய்வு செய்ய வேண்டும். ஆதரவுகள் குதிரை பேரமாகவும் இருக்கலாம்” என்று வலியுறுத்தினார். இதனால், ஆளுநர் அர்லேகர் தரப்பில் இருந்து வரும் முடிவுகள் மேலும் முக்கியத்துவம் பெற்றுள்ளன.