“படகுகளில் த.வெ.க. பெயர்.., மீனவர்களை மிரட்டும் தி.மு.க. அரசு” – விஜய் கண்டனம்.!

மீனவ நண்பர்கள் தங்களின் படகுகளில் தமிழக வெற்றிக் கழகம் என்று குறிப்பிட்டிருந்தால் அவர்களுக்கு மானியம் வழங்க மறுப்பதா என த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.

TVK Vijay -Fisher Men

சென்னை : படகுகளில் தவெக பெயர் இருந்தால் மீனவர்களுக்கு மானியம் மறுப்பதா? என்று அரசுக்கு விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  ஏற்கெனவே மீனவப் பெருமக்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக உயிரைத் துச்சமென நினைத்துக் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்கின்றனர். தமிழ்நாடு அரசு இனி வரும் காலங்களில் இதுபோன்ற செயல்களை முற்றிலுமாகக் கைவிட வேண்டும் என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.  அதில், ”மீனவ நண்பர்கள் தங்களின் படகுகளில் தமிழக வெற்றிக் கழகம் என்று குறிப்பிட்டிருந்தால் அவர்களுக்கு மானியம் வழங்க மறுப்பதா? எதேச்சதிகாரப் போக்கில் நடந்துகொள்ளும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கபட நாடகத் திமுக அரசுக்குக் கண்டனம்.

திருநெல்வேலி மாவட்டம், கூட்டப்புளி மீனவ கிராமத்தைச் சேர்ந்த எங்கள் கழகத் தோழர்கள், தங்களின் வாழ்வாதாரமாய் விளங்கும் மீன்பிடி தொழிலுக்கான தங்களின் படகுகளைத் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயருடன் பயன்படுத்தி வந்துள்ளனர். தங்களின் படகுகளில் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரை எழுதியிருந்ததால் அரசு சார்பில் வழங்கப்படக்கூடிய மானியத்தை வழங்க முடியாது என்று, அரசாங்க ஊழியர்கள் படகுகளின் உரிமையாளர்களிடம் தெரிவித்துள்ளனர். இது போன்ற எதேச்சதிகார அராஜக ஆட்சியின் வாயிலாகத் தமிழக வெற்றிக் கழகத்தை முடக்க நினைத்தால் அது ஒருபோதும் நடக்காது.

ஏற்கெனவே மீனவப் பெருமக்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக உயிரைத் துச்சமென நினைத்துக் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்கின்றனர். அப்படிச் செல்கையில் அவர்கள் இலங்கை அரச பயங்கரவாதத்தால் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். கைது மற்றும் படகுகள் பறிமுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளால் அவர்களின் வாழ்வாதாரமே கேள்விக்கு உள்ளாகிறது. மிக மோசமான சூழ்நிலையில் வாழ்ந்து வரும் மீனவர்களுக்கு முழு அளவில் பக்க பலமாக இருக்க வேண்டியது ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் கடமை.

ஆனால் மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வை நோக்கிய, கச்சத்தீவை மீட்பது அல்லது அதைக் குத்தகைக்கு எடுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழக வெற்றிக் கழகம் உள்பட, பல்வேறு தரப்பில் இருந்தும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது. இருந்தபோதிலும் இது தொடர்பாக ஒன்றிய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் அவர்கள் தங்கள் சொந்த ஊரிலேயே வாழ்ந்தும் அரசால் புறக்கணிக்கப்படுகிறார்கள். மாநில அரசானது அவர்களை ஏதோ அவர்களுக்கும் அரசுக்கும் தொடர்பில்லாதவர்கள் போல எதேச்சதிகார அரச பயங்கரவாதத்தோடு நடத்துவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாடு அரசு இனி வரும் காலங்களில் இது போன்ற செயல்களை முற்றிலுமாகக் கைவிட வேண்டும். இல்லையெனில், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மாபெரும் போராட்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்