விஜய் தலைமையில் போராட்டம்.. கூட்ட நெரிசலில் சிக்கி தவெக பெண் தொண்டர்கள் மயக்கம்.!
தவெக தொண்டர்கள் அடுத்தடுத்து மயக்கமடைந்ததால் போராட்டக் களத்தில் பரபரப்பு சூழ்நிலை ஏற்பட்டது.

சென்னை : அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டு சென்னை சிவானந்தா சாலையில் தவெக தலைவர் விஜய் தலைமையில் இன்னும் சற்றுநேரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்ள ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வருகை தரும் தவெகவினரை போலீசார் தடுத்து நிறுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்தப் போராட்டம் அஜித்குமாரின் மரணத்திற்கு நீதி கோருவதற்காகவும், வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழுவிற்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தியும் தவெக ஆர்ப்பாட்டத்திற்கு சென்னையில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் ‘திரு. மு.க. ஸ்டாலின் தலைமையிலான சமூக நீதி அரசுக்கு எதிராகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கக் கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்’ எனப் பேனர் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், ‘SORRY வேண்டாம் நீதி வேண்டும்.’ ‘உயிரின் மதிப்பு தெரியுமா… மன்னராட்சிக்குப் புரியுமா?’ போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளும் தொண்டர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கூட்ட நெரிசலில் சில தவெக பெண் தொண்டர்கள் சிக்கி மயக்கமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, ஆர்ப்பாட்டத்துக்கு வெளியூரிலிருந்து வாகனங்கள் மூலம் வரும் தொண்டர்களை காவல்துறையினர் ஆங்காங்கே மறித்து கைது செய்வதாகக் கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற சில தவெக தொண்டர்களை கைது செய்ததாகவும், இதற்கு விஜய் கடும் கண்டனம் தெரிவித்ததாகவும், கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என தவெக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்காக வண்ணாரப்பேட்டை, மயிலாப்பூர், கீழ்ப்பாக்கம் உட்பட 5 காவல் மாவட்ட துணை ஆணையர்கள் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், சென்னை முழுவதும் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.