'விஜய் வருகையால் விசிகவுக்கு பாதிப்பு ஏற்படாது' – திருமாவளவன்.!

விஜய் வருகையால் விசிக.விற்கு பாதிப்பு என தவறான தகவலை பரப்புகின்றனர் என்று விசிக. தலைவர் தொல்.திருமாவளவன் பேசியிருக்கிறார்.

thol thirumavalavan

நேற்று (26.09.2025) அம்பேத்கர் திடல் அசோக் நகரில் நடைபெற்ற, தமிழீழ விடுதலை போராளி லெப்.கேணல் திலீபன் நினைவு நாள் நிகழ்வில், விசிக தலைவர் தொல். திருமாவளவன் அஞ்சலி செலுத்தி வீரவணக்கம் உரையாற்றினார்.

மேடையில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ”திராவிட அரசியல் நீர்த்துப்போனால் இங்கே பாஜக, ஆர்.எஸ்.எஸ் வலிமை பெறும், அதிமுகவை பலவீனப்படுத்தி 2வது இடத்திற்கு வர பாஜக முயற்சிக்கிறது. சனாதன சக்திகள் வலிமை பெறமால் தடுக்க திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றாக வேண்டும்.

தந்தை பெரியாருக்கு முன்பே பண்டிதர் அயோத்திதாசர் பேசிய அரசியல் திராவிட அரசியல், திராவிடத்தை எதிர்ப்பவர்கள் பண்டிதரை எதிர்க்கிறார்கள் என்று தான் நாங்கள் புரிந்துகொள்ள முடியும். குடிப்பெருமை என்று பேசுவது பாஜக, ஆர்.எஸ்.எஸ்-க்கு துணைபோகிற அரசியல்.

விஜய் வருகையால் விசிகவுக்கு பாதிப்பு என தவறான தகவல்களை பரப்புகின்றனர், விசிக கொள்கைசார்ந்த கட்சி என்பதால் இன்னும் வலிமைபெறும். வெறும் தேர்தல் கனவுகளோடு மட்டும் களத்திற்கு வந்தவர்கள் அல்ல, பதவி ஆசைகளோடு மட்டும் பொதுவாழ்வுக்கு வந்தவர்கள் அல்ல.

விசிக கொள்கை சார்ந்து இயங்குகிறது, பேரறிஞர் அண்ணாவை சீமான் விமர்சிக்கிறார். திராவிட கொள்கையை ஏற்றவர்கள் அவருக்கு பதிலடி கொடுக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.