சென்னை :பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) உள்ள உட்கட்சி மோதல் எப்போது நின்று பழையபடி கட்சி மாறும் என தொண்டர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில் மேலும் அதிர்ச்சியளிக்கும் வகையில் உட்கட்சி விவகாரமானது சட்டமன்ற அளவிலும் வெடித்துள்ளது. ஏனென்றால், சட்டமன்றக் குழு தலைவர் ஜி.கே.மணியை பதவியில் இருந்து மாற்றக் கோரி, கட்சித் தலைவர் அன்புமணியை ஆதரிக்கும் மூன்று எம்எல்ஏக்கள் சட்டப்பேரவை செயலாளரிடம் கடிதம் அளித்துள்ளனர்.
இதன் மூலம், வரும் அக்டோபர் 14 அன்று தொடங்க உள்ள சட்டமன்ற கூட்டத்தொடருக்கு முன், பாமகவின் சட்டமன்றக் குழு இரண்டாகப் பிளவடையும் சூழல் உருவாகியுள்ளது. கட்சியின் ஐந்து எம்எல்ஏக்களில் மூன்று பேர் அன்புமணி தரப்பில், இருவர் ராமதாஸ்-ஜி.கே.மணி தரப்பில் உள்ளனர்.அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்களான தருமபுரி வெங்கடேஸ்வரன், மேட்டூர் சதாசிவம், சேலம் மேற்கு சிவக்குமார் ஆகியோர், சட்டப்பேரவை செயலாளரை சந்தித்து கடிதத்தை அளித்தனர்.
இதில், ஜி.கே.மணியை சட்டமன்றக் குழு தலைவராக இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்றும், அவருக்குப் பதிலாக தருமபுரி எம்எல்ஏ வெங்கடேஸ்வரனை புதிய தலைவராக அங்கீகரிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கை, பாமகவின் உள் மோதலின் தீவிரத்தை வெளிப்படுத்துகிறது. இதனால் சபாநாயகர் தனித்தனி கூட்டங்களுக்கு அழைக்கலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதே சமயம், அன்புமணி தரப்பு வழக்கறிஞர் கே.பாலு, செய்தியாளர்களிடம் பேசுகையில், “தருமபுரி எம்எல்ஏ வெங்கடேஸ்வரனை சட்டமன்ற பாமகக் குழு தலைவராகத் தேர்வு செய்துள்ளோம். பாமக தொண்டர்கள் அன்புமணி தலைமையில் செயல்பட்டு வருகின்றனர். கட்சியின் ஐந்து எம்எல்ஏக்களில் மூன்று பேரின் ஆதரவு அன்புமணிக்கே உள்ளது. சின்னம், வேட்பாளர் படிவம் உள்ளிட்டவற்றில் கையெழுத்திடும் அதிகாரம் அன்புமணிக்கே உண்டு. அனைத்துக் கட்சிக் கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கும் எங்களின் தரப்பினரையே அழைக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
