கூட்டணி குறித்து முன்பே அறிவிப்போம்! மனம் திறந்த பிரேமலதா விஜயகாந்த்!

தேமுதிக இடம் பெறும் கூட்டணியே வெற்றி பெறும் என பிரேமலதா விஜயகாந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Premalatha

சென்னை :தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் (தேமுதிக) மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று (நவம்பர் 13, 2025) சென்னை கோயம்பேடு தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெற்றது. மாநில, மாவட்ட நிர்வாகிகள், தேர்தல் குழு உறுப்பினர்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் கூட்டணி, மாநாடு ஏற்பாடு, நிதி திரட்டல் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.

கூட்டணி குறித்து மனம் திறந்த பிரேமலதா விஜயகாந்த், “வரும் ஜனவரி 9-க்கு முன்பு கூட்டணி அறிவிக்கலாம் அல்லது சூழ்நிலைக்கு ஏற்ப தள்ளிப்போகலாம். நாங்கள் இடம்பெறும் கூட்டணியே வெற்றி பெறும்” என்று உறுதிபடக் கூறினார். ஜனவரி 9-ஆம் தேதி கடலூரில் நடக்கும் மாநில மாநாட்டில் கூட்டணி நிலைப்பாடு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், பிரேமலதா தொடர்ச்சியாக முடித்த இரண்டு கட்ட சுற்றுப்பயணங்களுக்குப் பிறகு, மூன்றாம் கட்ட பயணம் நவம்பர் 16-ஆம் தேதி தொடங்க உள்ளது. இதில் மாவட்ட செயலாளர்களின் செயல்திறன் மதிப்பீடு, தேர்தல் முன்னெச்சரிக்கை திட்டங்களில் திருத்தங்கள், மக்களை மாநாட்டுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதே சமயம், பிரேமலதா பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்ற பிறகு நடக்கும் முதல் மாநில மாநாடு என்பதால், கடலூர் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்ட செயலாளரும் நிதி திரட்டல், மக்கள் பங்களிப்பு குறித்து பொறுப்பேற்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இக்கூட்டம் தேமுதிகவின் 2026 தேர்தல் தயாரிப்புக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. விரைவில் தேமுதிகவின் அடுத்தடுத்த அரசியல் விஷயங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.