சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று கே.வி. குப்பம் தொகுதியில் காலைப் பரப்புரையின்போது, கலைஞர் கனவு இல்லம் திட்டப் பயனாளியான ஒரு பெண்ணின் வீட்டுக்கு அவரது அன்பான அழைப்பை ஏற்றுச் சென்று பார்வையிட்டார்.அங்கு அந்தச் சகோதரியுடன் உரையாடிய முதலமைச்சர், அவர் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் மாதம் ஆயிரம் ரூபாய் பெற்று வருவதாகவும், அவரது குழந்தைகள் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தில் பயன்பெறுவதாகவும் அறிந்து மகிழ்ச்சி தெரிவித்தார்.
அப்போது முதலமைச்சர் அவரிடம், “அடுத்து, இல்லத்தரசி 8,000 ரூபாய் கூப்பனில் என்ன வாங்கப் போகிறீர்கள்?” என்று கேட்டார். இதுகுறித்து மு.க.ஸ்டாலின் தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:“2026 தேர்தல் வாக்குப்பதிவுக்கு முன்பாகவே, இல்லத்தரசி 8,000 ரூபாய் கூப்பனில் வீட்டுக்கு என்ன பொருள் வாங்கலாம்? எந்தக் கடையில் வாங்கலாம்? என்ற ‘டிஸ்கஷன்’ தமிழ்நாடு முழுக்க குடும்பங்களில் இப்போது ஓடுகிறது.
வீட்டுக்குத் தேவையான எந்தப் பொருளையும் நீங்கள் வாங்கிக்கலாம். ஆனால், அது முழுக்க முழுக்க என் சகோதரிகளின் ‘choice’-ஆகத்தான் இருக்கணும். அவர்கள்தான் ‘இல்லத்து அரசிகள்’, ‘குடும்பத்தலைவிகள்’!2026 வாக்குப்பதிவில் ‘தமிழ்நாடு அணியா – டெல்லி அணியா?’ என்று நான் கேட்கும்போது தமிழ்நாடு அணி என அனைவரும் சொல்வதைப் போல, இல்லத்தரசி டிஸ்கஷனில் வீட்டில் அனைவரும் ‘பெண்கள்தான்’ எனச் சொல்லணும்.
பெண்கள்தான் எப்பவுமே வெல்லணும்!”முதலமைச்சரின் இந்தப் பதிவு, திமுகவின் மகளிர் நலத் திட்டங்களை மீண்டும் அழுத்தமாக எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், இல்லத்தரசி 8,000 ரூபாய் கூப்பன் உள்ளிட்ட திட்டங்கள் மூலம் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதே திமுகவின் முக்கிய நோக்கம் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தேர்தல் பிரச்சாரத்தின் ஓர் அங்கமாக, முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ந்து மக்களின் வீடுகளுக்குச் சென்று நேரடியாக உரையாடி வருகிறார். இன்றைய கே.வி. குப்பம் பயணமும் அத்தகைய மக்கள் தொடர்பு நிகழ்வுகளில் ஒன்றாக அமைந்துள்ளது.
