4.25 மணி நேரம் காவல்துறை என்ன செய்துகொண்டு இருந்தது ? எடப்பாடி பழனிசாமி அட்டாக்..!

காவல்துறை 4 மணி நேரம் 25 நிமிடம் பாதிக்கப்பட்ட மாணவியைக் கண்டுபிடிக்க வக்கில்லாமல் போனது ஏன்? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் கேள்வியை எழுப்பியுள்ளார்.

Edappadi K. Palaniswami

சென்னை :கோவை விமான நிலையத்தின் பின்புறம் உள்ள தனிமையான பகுதியில், நவம்பர் 1 இரவு (2025) சுமார் 11:20 மணிக்கு, ஒரு தனியார் கல்லூரி மாணவி தனது ஆண் நண்பருடன் காரில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, மூன்று இளைஞர்கள் திடீரென்று வந்து, ஆண் நண்பரை கடுமையாகத் தாக்கி விரட்டினர். பின்னர், மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடினர். இந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை போலீஸ், குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைத்து 3 பேரை இந்த சம்பவத்தில் அதிரடியாக கைது செய்தது. குற்றவாளிகள் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த குணா (30), சதீஷ் (20), கார்த்திக் (21) என்ற மூன்று இளைஞர்கள் என சுட்டு பிடிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது கொலை, கொள்ளை, அடிதடி உள்ளிட்ட பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன எனவும் முன்னதாக தெரியவந்தது.

இதனையடுத்து, இந்த சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் ” கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு பற்றி விளக்கம் அளித்த கோவை காவல் ஆணையர் சரவணசுந்தர், ஞாயிற்றுக் கிழமை இரவு 11:20 மணிக்கு காவல்துறைக்கு மாணவியின் நண்பர் தொடர்பு கொண்டு உதவி கோரியதாகவும், 11:35 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், மறுநாள் அதிகாலை 4 மணிக்கு தான் மாணவியைக் கண்டதாகவும், அதுவும் அம்மாணவி தானாக வந்து சேர்ந்ததாகவும் தெரிவித்தார்.

இரவு 11:35 மணி முதல், அதிகாலை 4 மணி வரை, 4 மணி நேரம் 25 நிமிடம் என்ன செய்துகொண்டு இருந்தது காவல்துறை? என்பதே தற்போது எழுந்துள்ள கேள்வி. குற்றவாளிகளை பிடித்துவிட்டதாக தம்பட்டம் அடித்துக்கொள்ளும் பொம்மை முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது காவல்துறையால் சம்பவ இடத்தில் நின்றுக்கொண்டே நான்கரை மணி நேரம் பாதிக்கப்பட்ட மாணவியை கண்டுபிடிக்க வக்கில்லாமல் போனதற்கு வெட்கித் தலைகுனிய வேண்டும்.

100 போலீசார் இணைந்து பெரிய தேடுதல் வேட்டை நடத்தியதாக காவல் ஆணையர் சொல்கிறார். நான்கரை மணி நேரம், 100 போலீசாரால் சம்பவ இடத்தில் இருந்த பாதிக்கப்பட்ட மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது அதிர்ச்சியாக இருக்கிறது. “காவல்துறையால் கண்டுபிடிக்க முடியாத இடத்திற்கு மாணவி எப்படி சென்றார்?” என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு, “சிறிய சுவர் ஒன்று இருந்தது; அதை தாண்டிச் சென்றதால் கண்டுபிடிக்க முடியவில்லை” என்ற காவல் ஆணையர், சில நிமிடங்களில், “மிகப்பெரிய சுவர் இருந்தது; அதை தாண்டிச் சென்று அந்த மாணவி இருந்தார் ” என தனது கருத்தை மாற்றினார்.

அங்கு இருந்தது சிறிய சுவரா? பெரிய சுவரா? ஏன் அதைத் தாண்டி காவல்துறை, அதுவும் 100 பேர் கொண்ட படை, சென்று தேடவில்லை? “இருள் சூழ்ந்த தனிமையான இடம் என்பதால் பாதிக்கப்பட்ட மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை” என்ற விளக்கத்தை அளிக்கவே திமுக அரசின் காவல்துறை கூச்சப்பட வேண்டும். நள்ளிரவில் ஒரு பெண்ணை சம்பவ இடத்தில் தேடிக் கண்டுபிடிக்க திமுக அரசின் காவல்துறைக்கு துப்பில்லை என்று ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறதா திமுக அரசு?

இந்த சூழலில், “ஆக… குற்றவாளிகள் கைது, குற்றப் பத்திரிகை ஒரு மாதத்தில் தாக்கல் செய்து விடுவோம்” என்று பெருமை பேசுகிறார் பொம்மை முதல்வர். திரு. ஸ்டாலின் அவர்களே- அதற்கு முன்னால், உங்கள் காவல்துறை 4 மணி நேரம் 25 நிமிடம் பாதிக்கப்பட்ட மாணவியைக் கண்டுபிடிக்க வக்கில்லாமல் போனது ஏன்? என்பது பற்றி விளக்கம் அளிக்க வேண்டும். ஏனென்றால், In case you’ve forgotten, காவல்துறை உங்கள் கட்டுப்பாட்டில் தான் உள்ளது (ஏட்டளவில்)” எனவும் காட்டத்துடன் தெரிவித்துள்ளார்.