நாளை எந்தெந்த இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம் கொடுத்த அலர்ட்!

நாளை வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, உள்ளிட்ட சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

heavy rain IMD

சென்னை :மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (17-10-2024) அதிகாலை வட தமிழகம்- தெற்கு ஆந்திர கடற்கரை பகுதியில், புதுச்சேரிக்கும் நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு வடக்கே கரையை கடந்தது.

இதனையடுத்து, வட தமிழக பகுதிகள் மற்றும் லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தின் சில மாவட்டங்களில் நாளை (18.10.2024) கன  மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.

அதன்படி, நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது எனவும் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரையில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33டிகிரி செல்ஸியஸ் முதல் 34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 -26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.