சென்னை : பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக அடிக்கடி மின் தடை ஏற்பட்டு வரும் நிலையில், அதற்கான காரணங்களை தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் விளக்கியுள்ளார். மேலும், மின் தடை தொடர்பான புகார்களுக்கு உடனடி தீர்வு வழங்க புதிய நடவடிக்கைகளும் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், “காலையிலிருந்தே மின் தடைக்கான காரணங்களை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். கடந்த ஒரு ஆண்டில் மட்டும் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் 160-க்கும் மேற்பட்ட இடங்களில் மின் கேபிள்கள் சேதமடைந்துள்ளன” என்று கூறினார்.
மேலும், அமைச்சர் கூறுகையில், “பல இடங்களில் சாலைப் பணிகள், ஒப்பந்தப் பணிகள் மற்றும் பிற கட்டுமான பணிகளுக்காக தோண்டப்படும் குழிகளில், கீழே சென்ற மின் கேபிள்கள் தவறுதலாக வெட்டப்பட்டுள்ளன. இதனால் பல பகுதிகளில் திடீர் மின் தடை ஏற்பட்டுள்ளது” என்றார்.
மேலும், “இது மட்டுமல்லாமல், சில பகுதிகளில் டிரான்ஸ்பார்மர் பழுதுகளும் ஏற்பட்டுள்ளன. அந்த technical fault-களை சரி செய்வதற்கான பணிகள் இன்று முதல் தீவிரமாக தொடங்கப்பட்டுள்ளன” என்றும் தெரிவித்தார்.
மின் தடை ஏற்பட்டால் அதற்கான காரணம் மற்றும் சரியாகும் நேரம் குறித்து பொதுமக்களுக்கு தெளிவான தகவல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார். “எந்த பகுதியில் எந்த technical fault ஏற்பட்டுள்ளது, அதை சரி செய்ய எவ்வளவு நேரம் ஆகும் போன்ற தகவல்கள் அனைத்தும் இனிமேல் உடனுக்குடன் கால் சென்டர் மூலம் தெரிவிக்கப்படும்” என்று அவர் கூறினார்.
மின்தடை தொடர்பான தகவல்களை சமூக வலைதளங்களிலும் வெளியிடும் புதிய நடைமுறை இன்று முதல் தொடங்கப்படுவதாக அமைச்சர் அறிவித்தார்.
“யாராவது Twitter அல்லது பிற சமூக வலைதளங்களில் மின்சார வாரியத்தை Tag செய்து புகார் தெரிவித்தாலும், அல்லது Call Centre-ல் புகார் அளித்தாலும், அதற்கான தகவல்கள் பதிவு செய்யப்பட்டு பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும். மேலும் technical fault காரணமாக மின் தடை ஏற்பட்டால், அதையும் சமூக வலைதளங்களில் உடனடியாக வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்று அமைச்சர் தெரிவித்தார்.
இதற்கிடையில், தமிழ்நாட்டில் விரைவில் மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக பரவி வரும் தகவல்களையும் அமைச்சர் மறுத்தார். “தமிழ்நாட்டில் தற்போதைக்கு மின் கட்டண உயர்வு எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. இது குறித்து தவறான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் அவற்றை நம்ப வேண்டாம்” என்று அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் விளக்கம் அளித்தார்.
