சென்னை : தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 முடிவுகள் தமிழக அரசியலில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளன. 233 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 34.92% வாக்குகளுடன் முதலிடத்தைப் பிடித்து, 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்ற தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்துள்ளது.
ஆனால் ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்கள் பெரும்பான்மைக்கு இன்னும் 10 இடங்கள் குறைவாக உள்ள நிலையில், தவெகவுக்கு பிற கட்சிகளின் ஆதரவு தேவைப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில், ஆளுநர் தவெக தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்க வாய்ப்பு அதிகம் உள்ளது. தவெகவின் சட்டப்பேரவைக் குழு தலைவராக விஜய் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு, ஆளுநர் மாளிகையில் அவருக்கு முதலமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்படும்.
எனினும், தவெகவுக்கு தற்போது முழு பெரும்பான்மை இல்லாததால், ஆளுநர் அவருக்கு குறிப்பிட்ட கால அவகாசம் வழங்கி, சட்டப்பேரவையில் பெரும்பான்மையை (118) நிரூபிக்க வேண்டும் என்று கோருவார் என்று தெரிகிறது.இதனிடையே, தவெக தலைவர் விஜய், வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்களுடன் 3 மணி நேரம் முக்கிய ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப் பிறகு பனையூர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டார்.
தகவல்களின்படி, தவெக தலைவர் விஜய் மே 7ஆம் தேதி முதலமைச்சராக பதவியேற்க திட்டமிட்டுள்ளார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பதவியேற்பு விழா நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தவெக தனித்துப் போட்டியிட்டும் இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது தமிழக அரசியல் வரலாற்றில் முக்கியமான திருப்பமாகக் கருதப்படுகிறது. ஆட்சி அமைக்க ஆதரவு தேடும் பேச்சுவார்த்தைகள் அடுத்த சில நாட்களில் தீவிரமடையும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டின் அடுத்த அரசு எப்படி அமையும் என்பதை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
