ஓபிஎஸ் உடன் சந்திப்பா ? – உண்மையை உடைத்த செங்கோட்டையன்!

ஓபிஎஸ், டிடிவி தினகரனை நான் சந்தித்ததாக வேண்டுமென்றே வதந்தி பரப்புகிறார்கள் இதனால் எனக்கு மிகவும் வேதனை ஏற்பட்டுள்ளது என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

o panneerselvam sengottaiyan

சென்னை :அ.தி.மு.க.வில் இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட செங்கோட்டையன், சென்னையில் ஓ. பன்னீர்செல்வம் (ஓ.பி.எஸ்.) மற்றும் டி.டி.வி. தினகரனை சந்தித்ததாக வெளியான தகவல் தான் கடந்த சில நாட்களாகவே அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளான விஷயமாக இருந்து வருகிறது. இதில் ஏற்கனவே நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது நான் டிடிவி தினகரனை சந்திக்கவில்லை என பேசி விளக்கம் அளித்திருந்தார். அதனை தொடர்ந்து இந்த தகவல்கள் திட்டமிட்டு தனக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதற்காக பரப்பப்படுவதாகவும் தான் ஓபிஎஸ்ஸையும் சந்திக்கவில்லை எனவும் விளக்கம் அளித்துள்ளார்.

இந்த தகவல்கள் திட்டமிட்டு தனக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதற்காக பரப்பப்படுவதாகவும், இதனால் தனக்கு மனவேதனை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். சென்னை பயணம் தனது மனைவியின் மருத்துவ சிகிச்சைக்காக மட்டுமே என்று தெளிவுபடுத்திய செங்கோட்டையன், இதுபோன்ற வதந்திகளை நிறுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

சென்னையில் இருந்து கோபிசெட்டிப்பாளையம் திரும்பிய செங்கோட்டையன், செய்தியாளர்களிடம் பேசுகையில், “சென்னையில் அரசியல் ரீதியாக யாரையும் சந்திக்கவில்லை. என் மனைவி மருத்துவமனையில் இருப்பதால் சென்னைக்கு சென்றேன். முன்பு விளக்கம் அளித்த பிறகும், நேற்று மாலை சிலரை சந்தித்ததாக வதந்தி பரப்புகின்றனர். இவை திட்டமிட்டு எனக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் செயல். இதற்கு பதில் சொல்ல முடியாது, ஆனால் இது எனக்கு மனவேதனை அளிக்கிறது,” என்றார்.

அ.தி.மு.க.வில் பிரிந்திருக்கும் பல்வேறு அணிகள் ஒருங்கிணைய வேண்டும் என்ற தனது நோக்கத்தை செங்கோட்டையன் வலியுறுத்தினார். “எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஆட்சி மீண்டும் மலர வேண்டும். கோடிக்கணக்கான தொண்டர்களின் கனவு நிறைவேற வேண்டும். அதற்காகவே நான் பேசி வருகிறேன். ஆனால், வதந்திகள் பரப்புவதை இனியாவது நிறுத்த வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்,” என்று அவர் கூறினார்.இந்த விளக்கத்தின் மூலம், செங்கோட்டையன் தனது சென்னை பயணம் தனிப்பட்ட காரணங்களுக்காக மட்டுமே என்று தெளிவுபடுத்தி, அரசியல் சந்திப்புகள் குறித்து பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.