சென்னை : நடிகை ஜூலி, தன்னை குறித்து பரப்பப்படும் அவதூறு குற்றச்சாட்டுகள் தொடர்பாக காவல் ஆணையர் அலுவலகத்தில் மீண்டும் புகார் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தனது பெயருக்கும் குடும்ப வாழ்க்கைக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் திட்டமிட்டு பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதாக குற்றஞ்சாட்டி கண்ணீருடன் பேசினார்.
தன் மீது “கிட்னி மோசடி” உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதாகவும், இதுதொடர்பாக ஏற்கனவே எட்டு பேர் மீது புகார் அளித்திருந்ததாகவும் ஜூலி கூறினார். ஆனால் காவல்துறை தன்னிடம் முறையான விசாரணை நடத்தாமல், வழக்கை பதிவு செய்ய மறுத்ததாகவும் அவர் வேதனை தெரிவித்தார். குற்றச்சாட்டுகளுக்கு எதிரான ஒலிப்பதிவுகள், திரைப்பிடிப்புகள் உள்ளிட்ட ஆதாரங்களை வழங்க தயாராக இருந்தும் அவற்றை யாரும் ஆய்வு செய்யவில்லை என்றும் கூறினார்.
மேலும், ஒரு செய்தி ஊடகத்தில் வெளியான தகவலில் தன்னையும் தனது கணவரையும் தொடர்புபடுத்தி பொய்யான கதை உருவாக்கப்பட்டதாகவும், பின்னர் அதில் இடம்பெற்ற பெண்ணின் குரல் குறித்த உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்ததாகவும் ஜூலி தெரிவித்தார். தன்னுடைய பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சிலர் திட்டமிட்டு தகவல்களை திரித்து பரப்பியதாக அவர் குற்றம்சாட்டினார்.
உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளால் தானும் தனது குடும்பமும் கடுமையாக மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக கூறிய ஜூலி, “என் மீது எந்த தவறும் இல்லை. சட்டத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளேன். உண்மை விரைவில் வெளிவரும்” என தெரிவித்தார். மேலும், ஒரு பெண்ணின் கண்ணியத்தை இழிவுபடுத்தும் வகையில் சமூக வலைதளங்களிலும் சில தளங்களிலும் நடைபெறும் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
