சென்னை :தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்திற்கு கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தேர்தல் பயத்தில் திமுக விடுவித்ததாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியதை மறுத்த ஸ்டாலின், “உங்கள் டெல்லி ஓனர்கள் (பாஜக) தேர்தலைக் காரணம் காட்டி உரிமைத்தொகையை தடுத்து நிறுத்துவார்கள் என்ற சூழ்ச்சிதான் காரணம்” என்று தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் தனது பதிவில், “எங்கள் திட்டத்தின் மீது சவாரி செய்கிறது அதிமுக. #DravidianModel சத்தமில்லாமல் நடத்திய surgical strike உங்கள் உறக்கத்தைக் கெடுத்து, இப்படி புலம்பும் அளவுக்கு பெரிய HIT அடித்துள்ளது” என்று கிண்டலடித்துள்ளார். திமுகவின் மகளிர் திட்டங்களை (விடியல் பயணம், புதுமைப்பெண், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை) இல்லந்தோறும் எடுத்துச் செல்ல மகளிர் படை களமிறங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி மீது தொடர்ந்து தாக்குதல் நடத்திய ஸ்டாலின், “காப்பி, பேஸ்ட் அரசியல் என்பது காலங்காலமாக அதிமுகவின் வாடிக்கை. அதனால் புதுசா ஏதாவது சொல்லுங்கள்!” என்று சாடியுள்ளார். “எங்கள் முன் உங்க டப்பா இன்ஜின் தாக்குப்பிடிக்காது” என்று கூறி, திமுகவின் திட்டங்களின் வலிமையை வலியுறுத்தியுள்ளார்.இந்த பதிவு சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
திமுக – அதிமுக இடையேயான வார்த்தைப் போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை மையமாக வைத்து இரு தரப்பும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றனர். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக இத்தகைய விமர்சனங்கள் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஒட்டுமொத்தமாக, முதலமைச்சர் ஸ்டாலினின் இந்த பதிவு திமுகவின் மகளிர் நலத் திட்டங்களை பாதுகாப்பதோடு, எதிர்க்கட்சியின் விமர்சனங்களை கிண்டலுடன் எதிர்கொள்ளும் வகையில் அமைந்துள்ளது. “டப்பா இன்ஜின் தாக்குப்பிடிக்காது” என்ற வார்த்தை இப்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
